Tamil man rescued Korean kid from drowning in River : தென்கொரியாவின் சியோல் பகுதியில் உள்ள ஹான் ஆற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை காப்பாற்றியுள்ளார் ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்பவர். புதுவையை சேர்ந்த இந்நபர் சியோலில் உள்ள சேஜோங் என்ற பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி அன்று தன்னுடைய நண்பருடன் யோஹூய்டோ ஹாங்கேங் என்ற பூங்காவிற்கு சென்றுள்ளார் ஆரோக்கியராஜ் செல்வராஜ்.
அதன் அருகே ஓடிக் கொண்டிருந்த ஹான் ஆற்றங்கரையின் தடுப்புகளை தாண்டி 5 வயது சிறுவனும், 7 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனை அவர்களின் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. அந்த சிறுமி அவளுடைய பெற்றோர்களுடன் சென்றுவிட்டார். சிறுவன் குறித்து கேட்டபோது அச்சிறுமிக்கு பதில் கூற தெரியவில்லை. அப்போது கற்பாறைகளுக்கு நடுவே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வழுக்கி ஆற்றில் விழுந்துவிட்டார். விபரீதம் உணர்ந்த ஆரோக்கியராஜ் நீருக்குள் இறங்கி சிறுவனை காப்பாற்றிவிட்டார்.
அதிக அளவு நீரை குடித்த சிறுவன் மயங்கிய நிலையில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். எந்த விதமான விபரீதமும் நேராமல் குழந்தை சரியான நேரத்தில் காப்பற்றப்பட்டதால் ஆரோக்கியராஜூக்கு அப்பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். தன்னுடைய அடையாள அட்டை, போன் ஆகியவற்றோடு ஆற்றில் குதித்துள்ளார் ஆரோக்கியராஜ். நடந்தவற்றை இந்திய தூதரகத்தில் தெரிவித்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil