தமிழகத்தில் ரூ.2,700 கோடி மதிப்பிலான முதலீட்டுத்திட்டங்களை அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளது. முதல்வர் பழனிசாமியின் அமெரிக்க பயணத்தின்போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 03ம் தேதி) நியூயார்க் நகரத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு ஜீன் மார்ட்டின், சைட்டஸ் பார்மா, நோவிடியம் லேப்ஸ், ஆஸ்பயர் கன்சல்டிங், ஜில்லியன் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ரூ.2,780 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதுமட்டுமல்லாது, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் அதன் உற்பத்தி ஆலையை துவக்க உள்ளது.
இந்தியாவில் தொழில்கள் நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகமாக உள்ளதால், மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது வர்த்தகத்தை துவக்குவதற்கு ஏதுவான திட்டங்களுக்காக முதல்வர் பழனிசாமி, அமெரிக்க தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கேட்டர்பில்லர், போர்டு மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிலதிபர்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பின்டெக், ஏரோஸ்பேஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த தமிழகம் அவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இந்த முதலீட்டுத்திட்டங்களால், தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா செல்லும் முதல்வர் பழனிசாமி, பின் அங்கிருந்து துபாய் புறப்பட்டு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.