Tamil World News Update : ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், தலைநகர் காபூலில் தாலிபான் போராளிகள் ஆயுதங்களை ஏந்தி வானில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது 17 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போரில் தற்போது தாலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாலிபான்கள் புதிய ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் எதிர்ப்புப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் தாலிபான்களுக்கு அடிபணியபோவதில்லை என்றும், எதிர்த்து போரிட தயார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பஞ்ச்ஷிரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வெற்றியை போர்க்களத்தில் கொண்டாட தாலிபான்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வானத்தை நோக்கி துப்பாக்கியால் வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் பஞ்ச்ஷிரை கைப்பற்றியதாக வெளியான செய்தியை எதிர்ப்புத் தலைவர்கள் மறுத்துள்ள நிலையில், பஞ்ச்ஷீர் வெற்றி பற்றிய பொய்யான செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவி வருவதாக கிளர்ச்சியாளர்களை வழிநடத்தும் அகமது மசூத் கூறியுள்ளார். இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிபான்கள் மற்றும் பஞ்ச்ஷிரில் உள்ள போராளிகள் போரை நிறுத்தி தங்கள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டதாக டோலோ செய்தி தெரிவிக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil