Advertisment

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்

மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதிகாரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிறிசேனாவின் இந்த அதிரடி முடிவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல - அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது. அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதிகாரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார். அண்மையில் நடைபெற்ற ஐநாவின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று திமிராகப் பேசினார். இதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ, கண்டிக்கவோ இந்தியா உட்பட எந்த நாடும் முன்வரவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா சபையிலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.

ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது. தமிழர்களையும், ராஜபக்சேவுக்கு எதிரானவர்களையும் மிரட்டியும், முறைகேடுகள் செய்தும் தேர்தலில் வெற்றி பெற சிறிசேனா - ராஜபக்சே கூட்டணி முயலும். அவ்வாறு நடந்தால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிரான செயல்களும் தீவிரமடையும். இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம். அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Mk Stalin Srilanka Vaiko
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment