இலங்கை தமிழர்கள்: இலங்கையின் உவா மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் முதற்கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை தேயிலை தோட்ட தொழிலாளர்களான தமிழர்களிடம் பிரதமர் மோடி இன்று ஒப்படைத்தார்.
இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. இவற்றில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றதும், வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 55 ஆயிரம் விடுகளை கட்டித்தரும் செயல் திட்டம் கடந்த 2015ல் உருவாக்கப்பட்டது.
ஆனால், போதுமான நிதியாதாரம் இல்லாததால் இந்தாண்டு இறுதிக்குள் சுமார் 6 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இதுதவிர, உவா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசின் உதவியுடன் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் முடிவு செய்யப்பட்டது.
இருநாட்டு அரசுகள் சார்பில் பயனாளிகளுக்கு தவணை முறையில் 9 லட்சத்து 50 ஆயிரம் (இலங்கை) ரூபாய் பணம் தந்து இந்த வீட்டு திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வகையில், உவா மாகாணத்துக்கு உட்பட்ட துன்சிநானே, நுவரெலியா பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட 400 வீடுகளை பயனாளிகளுக்கு முதல் தவணையாக வீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் வழியாக பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளுக்கு இந்த வீடுகளை ஒப்படைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, #ModiWithSriLankanTamils என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.