தாய்லாந்து குகையில் 12 சிறுவர்களை மீட்ட ரிச்சர்டின் துயரம்: தந்தை உயிர் பிரிந்தது

குகையில் இருந்து வெளிவந்த இறுதி நபர் இந்த மருத்துவர் தான். மிக விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்.

தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் சியாங் மாகாணத்தில் இருக்கிறது தாம் லுவாங் நாங் நாண் என்ற குகை. கடந்த மாதம் 23ம் தேதி கால்பந்தாட்டப் பயிற்சியினை முடித்துவிட்டு 12 மாணவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் குகையினை சுற்றிப் பார்க்க சென்றார்கள்.

பருவமழை காரணமாக குகையில் அனைத்து பகுதியிலும் நீர் சூழ்ந்துவிட்டது. தப்பிக்க வழியின்றி இரண்டு வாரங்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தார்கள் 13 பேரும். அவர்களை மீட்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து துறைசார் வல்லுநர்களை அழைத்து வந்தது தாய்லாந்து அரசாங்கம்.

அப்படியாக வந்தவர் தான் ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹாரிஸ். மயக்கமருந்தியல் நிபுணரான மருத்துவர் ரிச்சர்ட், குகை நீச்சல் வீரரும் கூட. குகைக்குள் ஏற்படும் விபத்துகளில் சிக்கியிருக்கும் மனிதர்களை மீட்பதில் வல்லுநர்.

இவரின் இத்தகைய மீட்பு பணிகளுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர் ரிச்சர்ட். இவரை இந்த மீட்பு பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து நீச்சல் வீரர்கள் பரிந்துரை செய்ய ஆஸ்திரேலியாவில் இருந்து தாய்லாந்து புறப்பட்டு வந்தார்.

குகைக்குள் சென்று அங்கிருக்கும் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா, அனைவராலும் குகையைக் கடந்து செல்ல இயலுமா என்று பரிசோதித்து, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு 13 பேரும் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியவர் ரிச்சர்ட் தான். மூன்று நாட்கள் குகைக்குள் இம்மாணவர்களுடன் தங்கியிருந்தார் ரிச்சர்ட்.

13 நபர்களும் குகையில் இருந்து  வெளிவந்த பின்னர், இறுதியாக குகையில் இருந்து வெளியே வந்தவர் ரிச்சர்ட். இவர்கள் மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலே ஆஸ்திரேலியாவில் இருந்த ரிச்சர்டின் தந்தை உயிரிழந்துவிட்டார்.

அதைப்பற்றி ரிச்சர்ட் எதுவும் பேசாத நிலையில் அவரின் மேல் அதிகாரி ஆண்ட்ரூ ப்யர்ஸ் கூறுகையில் “ரிச்சர்ட் இன்னும் சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பிவிடுவார்” என்றார். மேலும் “ரிச்சர்ட் குடும்பத்தாருக்கு இது மிகவும் கடினமான காலம் இந்நேரத்தில் நாம் அனைவரும் ரிச்சர்டுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.

“ரிச்சர்ட் குடும்பத்தாரின் தனிப்பட்ட விசயங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறி ரிச்சர்ட்டின் தந்தை எதனால் உயிரிழந்தார் என்பதை கூற மறுத்துவிட்டார். விடுமுறையில் குடும்பத்தாருடன் இருந்திருக்க வேண்டிய நேரத்தில் தான் ரிச்சர்ட் இப்பணிக்காக தாய்லாந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close