ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து

உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள மரண தண்டனை. 9 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றிய தாய்லாந்து.

மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு இது ஒரு கவலை அளிக்கும் தகவலாக இருக்கின்றது.

ஆம்னாஸ்ட்டி இண்டெர்நேசனல் அமைப்பால் பெரிதும் கவனிக்கப்பட்டு வந்த தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்டிருக்கும் மரண தண்டனை பெரும் வருத்தத்தை தருவதாக கூறியிருக்கின்றது ஆம்னாஸ்ட்டி அமைப்பு.

26 வயதான தீரஷக் லாங்ஜீ, 2012ம் ஆண்டு ஒரு மொபைல் போனைப் பறிப்பதற்காக 17 வயதான இளைஞரை 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார். அதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கி அதனை நிறைவேற்றியும் இருக்கின்றார்கள். நேற்று மாலை, கொலைக் குற்றவாளியான தீரஷக் லாங்ஜீக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிறை அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த மரணதண்டனை குறித்து, தாய்லாந்திற்கான சர்வதேச ஆம்னாஸ்ட்டி கவுன்சில் தலைவர் கேத்ரின் ஜெர்சன் கூறுகையில், இது தாய்லாந்திற்கும் மனித நேயத்திற்கும் பின்னடைவினை தந்த காரியம் ஆகும். நாங்கள் ஏற்கனவே மரண தண்டனையை முற்றிலும் ஒழித்துவிட்ட நாடாக தாய்லாந்தினை கணக்கில் கொண்டிருக்கையில், இந்நிகழ்வு ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

2003ம் ஆண்டில், துப்பாக்கியால் குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் முறையை மாற்றி விஷ ஊசியை போடும் வழக்கத்தை கடைபிடித்து வந்தது தாய்லாந்து. 2003ல் தொடங்கி, தீரஷக் லாங்ஜீயுடன் சேர்த்து இது வரை ஏழு பேருக்கு விஷ ஊசியை பயன்படுத்தி இருக்கின்றது தாய்லாந்து அரசாங்கம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close