அமெரிக்காவில் ஜிபிஎஸ் காட்டிய வழியில் காரை ஓட்டிச் சென்ற நபர், காருடன் ஏரியில் விழுந்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் இல்லாமல் உலகம் இயங்குவது கடினமாகிவிட்டது. சொல்லப்போனால் தொழில்நுட்பங்களின் உதவி இல்லாமல் அன்றாட பணிகள் முடங்கிவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் இயங்கும் அறிவியல் உலகத்தில், ஜிபிஎஸ் கருவியின் உதவியை கண்மூடித்தனமாக நம்பி சென்ற அமெரிக்கர் ஒருவரின் கதை, பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் வெர்மொண்ட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர் ஒருவரின் காரில் வெளியில் சென்றுள்ளார். தற்போதைய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்யூவி மாடலான அந்த காரில், உரிய இடத்தை காட்டும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், அந்த நபர் காரை ஓடிச் சென்றுள்ளார். அப்போது, அந்த கருவி காட்டிய வழியில் சென்ற அவர், உறைந்த நிலையில் இருந்த ஏரி ஒன்றில் காரை செலுத்தியுள்ளார். இவருடன் இந்த காரில் இரண்டு பேர் பயணித்துள்ளனர். கடைசியில், மூவரும் காருடன் ஏரியில் விழுந்துள்ளனர். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் நெவிகேஷன் ஆப்பை நம்பி அந்த நபர், காரை ஏரியிக்குள் செலுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை சற்றும் எதிர்ப்பார்க்காத, காரின் உரிமையாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஜிபிஎஸ் கருவி குறித்தும், தனது நண்பரின் முட்டாள் தனமானச் செயல் குறித்து, புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.