சென்னை மழையில் வெள்ளத்தில் இறங்கி மக்கள் பணியை செய்த காவல் துறை அதிகாரிக்கு இன்றும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. எப்போதும் போலீஸ்காரர்கள் என்றால் மிடுக்காக, மக்களிடம் கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு மக்களின் துயர் துடைக்க இறங்கி வேலை செய்யும் போலீஸ்காரர்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
சென்னையில் நடந்த சம்பவம் இப்படியென்றால், ஆஃப்கானிஸ்தானில் போலீஸார் ஒருவர் மக்கள் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே துறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சையது பாஷம் பாட்சா என்பவர்தான் அந்த போலீஸ்.
மக்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பிரமுகர்கள் கூடியிருக்கும் ஓரிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் சையது பாஷம். தீடீரென பலத்த பாதுகாப்பையும் மீறி ஒருவர் உள்ளே நுழைகிறார்.
சந்தேகம்படும்படியாக இருந்த அந்நபரை நிறுத்த முனைந்தார் காவல் அதிகாரி சையது. ஆனால், அவரையும் மீறி அந்நபர் வேகமாக உள்ளே நுழைய முனைந்தார். அவரை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரி சையது, அவர் ஒரு மனித வெடிகுண்டு என்பதை உணர்ந்தார்.
உடனேயே உள்ளேயிருக்கும் மக்களை காப்பாற்ற அந்த அதிகாரி என்ன செய்தார் தெரியுமா? அந்நபரை உள்ளே போகவிடாமல் தன்னுடன் அணைத்துக்கொண்டார்.
அந்த மர்ம நபர் தன் உடலுடன் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி வெடிக்க செய்துவிட்டார். காவல் துறை அதிகாரி சையது பாஷம் தன் மக்களுக்காக உயிரையே துறந்தார். இந்த சம்பவத்தில் 7 போலீஸ் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.