சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியமா உங்களுக்கு? ஆனால், சிக்கன் மீதான உங்கள் காதலை நிரூபிக்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்? இங்கே ஒரு காதல் ஜோடி சிக்கனுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என பாருங்கள்.
இங்கிலாந்தில் கே.எஃப்.சி. நிறுவன சிக்கன் மீது பிரியம் கொண்ட காதல் ஜோடி, கே.எஃப்.சி. கடையில் தங்களுடைய திருமண வரவேற்பை நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எட்வர்டு சிம்ஸ் மற்றும் செரிஷ் இவர்கள்தான் அந்த காதல் ஜோடி. எட்வர்டு சிம்ஸ் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். செரிஷ் குழந்தையை கவனித்து வருகிறார். சமீபத்தில்தான் பதிவு திருமணத்தை செய்துகொண்ட இவர்கள், வரவேற்பு நிகழ்ச்சியை எல்லோரை போல நடத்த விரும்பவில்லை. புதுவிதமான இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.
அதனால், தங்களுக்கு பிடித்தமான கே.எஃப்.சி. கடையொன்றில் ரிசப்ஷனை நடத்தியிருக்கிறார்கள் அந்த ஜோடி. கடை முழுவதையும் சிகப்பு நிறை கே.எஃப்.சி. பலூன்களால் அலங்கரித்திருக்கின்றனர். தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், சுவையான உணவுகளுடன் ரிஷப்ஷனை கொண்டாடியிருக்கின்றனர்.
இதுகுறித்து அத்தம்பதியர் கூறியதாவது, “எங்களுக்கு சிக்கன், சிப்ஸ் சாப்பிடுவதென்றால் கொள்ளை பிரியம். வாரத்தில் ஒருமுறையாவது இங்கு உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். மற்றவர்களுக்கு சோர்வை தரக்கூடிய விதத்தில் ரிசப்ஷன் நடத்த எங்களுக்கு விருப்பமில்லை. எங்கள் ரிஷப்ஷனுக்கு நாங்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைத்தோம்”, என கூறினர்.
இம்மாதிரி ரிஷப்ஷனை நடத்தியதால் இவர்களுக்கு பணமும் பெரிதாக செலவாகவில்லை. வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவுக்காக 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவளித்துள்ளனர். இதனால், சேமித்த தொகையின் மூலம் ஆம்ஸ்டர்டாமுக்கு இரண்டு வாரங்கள் தேன்நிலவு செல்ல திட்டமிட்டுள்ளனர்.