/indian-express-tamil/media/media_files/2025/03/29/FEqlvdf47bOdgbJtE5of.jpg)
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின. 7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியான்மரின் 2-வது பெரிய நகரமான மண்டலேயில் இருந்து 17.2 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் மாண்டலே மற்றும் தலைநகர் நைபியிதோவில் கடுமையான பாதிப்பு பதிவானது. இதனால் மாண்டலே விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். கட்டங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து அங்கும், இங்குமாக ஓடினர். சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் மாட மாளிகைகள் நொடிப்பொழுதில் கட்டடக் குவியலாக மாறின.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் உணரப்பட்டது. அங்கு கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன.பாங்காக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீர் ததும்பி, செயற்கை அருவிபோல் கொட்டியது.
கட்டட இடிபாடுகளில் இரும்புக்கம்பிகள் சூழ்ந்திருக்க அதில் சிக்கிக் கொண்ட தொழிலாளர் ஒருவர் உதவிக்கரம் கேட்டு அலறியது மனதை மிகவும் உருக்கியது. நிலநடுக்கத்தால் பாங்காக்கில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் சுரங்கப்பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் குலுங்கிய காட்சிகளும் வெளியாகின.
/indian-express-tamil/media/media_files/2025/03/29/gMn8DNljzcto9Vzi2P14.jpg)
பாலங்கள், கட்டுமானங்கள், குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் மியான்மரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 255-ஆக அதிகரித்துள்ளது. சரிந்து விழுந்த ட்டட இடிபாடுகளில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்கப்பாதை மற்றும் பாலங்கள் மூடப்பட்டன. தலைநகர் பாங்காக்கில் கட்டடங்கள் இடியும் அபாயம் இருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்த நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.மேலும் மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமன்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்பட 15 டன் நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.