விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு!

பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்ஃபி‌ஷர் விமான நிறுவனத்துக்கு 13 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி தலைமறைவாகி விட்டார். அவர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியைக் கட்டாயம் அவர் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று கடன் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் மல்லையாவின் கடன் பாக்கித் தொகையை வசூலிக்க கடன் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுப்படி 13 இந்திய வங்கிகள் இங்கிலாந்து ஐகோர்ட் வணிகக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை முடிவில் பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அமலாக்க அதிகாரி அர்த்தமுள்ள பலப்பிரயோகம் செய்யவும் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இங்கிலாந்தில் இருக்கும் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் இங்கிலாந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கவிருக்கிறார்கள்.

அதன்படி லண்டன் லேடிவாக் சொகுசு பங்களா, குயின் ஹுலேன், டெவின், வெல்வின் கட்டிடங்களில் சோதனை நடத்தி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே லண்டன் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது.

×Close
×Close