1. 6 மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை நேற்றிரவு தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென முடங்கின. சுமார் 6 மணி நேரம் கழித்துத்தான், இந்த சமூக வலைத்தள பக்கங்கள் மீண்டும் உலகளவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நீண்ட நேர முடக்கம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என வலைத்தள கண்காணிப்புக் குழு டவுன்டெக்டர் கூறியுள்ளது.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இடையூறு நிறுவனத்திற்குள் நடந்த தவறின் விளைவாக இருக்கலாம் அல்லது ஒருவேலை நிறுவனத்தில் உள்ள ஏதேனும் நபரின் வேலையாக இருக்கலாம் என கேட்டால், அதுவும் சாத்தியம் தான் என கூறுகிறது.
2. ஐஎஸ்ஐஎஸ் கூடாரத்தை தகர்த்திய தாலிபான்கள்
தாலிபான் அரசாங்க படைகள், ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு காபூலிலிருந்த இஸ்லாமிய அரசுப் படைகளின் கூடாரத்தை முற்றிலுமாக அழித்தது. தாலிபான்களின் அதிரடி தாக்குதலானது, காபூலில் மசூதி அருகில் அரங்கேறிய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய அரசு பொறுப்பு ஏற்றதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
ஏனென்றால், ஆப்கானைவிட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆப்கன் தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
தாலிபான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தாலிபான் அரசு படையின் ஸ்பேஷல் போர்ஸ், ஐஎஸ்ஐஎஸ் எதிராக இந்த அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் அவர்களது கூடாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றார். உள்ளூர் வாசிகள் கூற்றுப்படி, பல மணி நேரம் நீடித்த சண்டையில், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இரவு 11.30 மணியளவில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் வெடித்துச் சிதறியதில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் அனைவரும் இறந்ததாகவும், அதிகாலை வரை சண்டை நீடித்ததாகவும் கூறுகின்றனர்.
3. பணத்தைப் பதுக்கிய முக்கிய நபர்களின் பெயர்களை வெளியிட்ட பண்டோரோ பேப்பர்ஸ்
உலகின் பல பணக்காரர்களும், அதிகாரத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்களும், தனது சொத்துகளை வரி செலுத்துவதிலிருந்து மறைக்க உதவும் செல் நிறுவனங்களுக்கு முடிவுகட்டக் குரல்கள் ஒலிக்கிறது.
நேற்று வெளியான அறிக்கையின்படி, உலக தலைவர்களும், கோடீஸ்வரர்களும், வெளிநாடுகளில் ரகசியமாக முதலீடு செய்து டிரில்லியன் கணக்கான டாலர் அளவிலான பணத்தை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை, பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பலரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
4. சீனாவின் படகு எங்கள் எல்லைக்குள் எப்படி வரலாம் – மலேசியா கண்டனம்

மலேசியா அரசு, கோலாலம்பூருக்கான சீனத் தூதரை வரவழைத்து, பெய்ஜிங்கின் கப்பல்களின் “ஆக்கிரமிப்புக்கு” தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. மலேசியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சர்வே கப்பல் உட்பட சீனாவின் முக்கிய கப்பல் உலாவியதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்த படகுகள் எப்போது மலேசியா எல்லைக்குள் வந்தன என்பதைத் தெரிவிக்கவில்லை
5. 3000 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு? சிக்கிய பிரான்சின் கத்தோலிக்க சபை

பிரான்சில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அங்கு பணியாற்றும் நபர்களால் சுமார் 3000 குழந்தைகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை ஆராய்ந்த தனி ஆணையம்,குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பாதிரியார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆணையம் இரண்டரை ஆண்டுகளாக விசாரணை செய்து வருகிறது. விசாரணையின் முழு அறிக்கை, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil