போப் ஆலோசகர் மீது பாலியல் புகார்

போப் பிரான்சிஸின் உயர் ஆலோசகர் தொடர்ந்து பலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, அவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப் பிரான்சிஸின் உயர் ஆலோசகரான ஜார்ஜ் பெல் என்பவர் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்தன. அப்போது இதுகுறித்து விளக்கமளித்த போப் பிரான்சிஸ், ”இது உண்மையாக இருந்தாலும், நீதியின் பின்தான் நாம் செல்ல வேண்டும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும்”, என தெரிவித்தார். இந்நிலையில், ஜார்ஜ் பெல் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ஆஸ்திரேலிய காவல் துறை வியாழக்கிழமை பதிவு செய்தது. அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மூத்த மதபோதகராக இருந்தபோது, பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கியதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் பெல் கடந்த பல வருடங்களாகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கும் காவல் துறையினர், இதுகுறித்து நேரில் ஆஜராகுமாறு ஜார்ஜ் பெல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், ஜார்ஜ் பெல்லின் மீதான பாலியல் வழக்குகளின் விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை. மேலும், ஜூலை 18-ஆம் தேதி ஜார்ஜ் பெல் மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஜார்ஜ் பெல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தான் குற்றமற்றவன் என நீதிமன்றத்தில் நிரூபிக்க அவர் காத்துக்கொண்டிருப்பதாகவும், காவல் துறையால் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மறுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாட்டிகன் தேவாலயத்தில் மதகுருமார்கள் பெரும்பாலானோர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்த நிலையில், ஜார்ஜ் பெல் மீதான பாலியல் குற்றச்சாட்டு போப் பிரான்ஸிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெல் மீதான புகார் குறித்து போப் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

×Close
×Close