பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலூச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இயற்கை வளம் நிறைந்த பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின் வளங்களை சுரண்டும் அரசு, அப்பாவி மக்களை வஞ்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் மார்ச் 11 காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் தீடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை ராணுவத்தினர் என்ற கிளர்ச்சிபடையினர் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பயணிகளை பலுச் அமைப்பினர் சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை மட்டும் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பணய கைதிகளை கொன்று விடுவோம் என்று கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறை பிடித்ததும், 182 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறோம். கடந்த 15 மணிநேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, கூடுதலாக 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/2TpkpFdmq1d4mjEhrpXD.jpg)
இதற்கிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 27 பலுச் அமைப்பினர் உயிரிழந்தனர். மேலும், பணய கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 155 பயணிகளை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கோழைத்தனமான தாக்குதலை நடத்தும் மிருகத்தனமான பயங்கரவாதிகள் எந்த சலுகையும் பெற தகுதியற்றவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் கூறினார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார், அப்பாவி பயணிகளைக் குறிவைத்ததற்காக தீவிரவாதிகளை "மிருகங்கள்" என்றார்.
நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பயணிகளை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, போராளிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.