/indian-express-tamil/media/media_files/2024/11/06/VdUbxsT4UAKvnvYEulRQ.jpg)
ஹெச்-1பி விசா விதிகளில் இன்னும் மாற்றம்... அதிரடியை நிறுத்தாத அமெரிக்கா!
ஹெச்-1பி விசா நடைமுறையில் 2026 பிப்ரவரி முதல் $100,000 (சுமார் ரூ.83 லட்சம்) கட்டணம் அமலுக்கு வரும் முன்பு, அதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் தொழில்நுட்ப ஆலோசகர்கள் (Tech Consultants) அமெரிக்காவிற்குள் நுழைந்து தங்கள் குடும்பங்களைக் கொண்டுவருவதற்கு அனுமதிக்கும் தற்போதைய விசா நடைமுறை "முற்றிலும் தவறானது" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் நியூஸ்நேஷனிடம் (NewsNation) பேசுகையில், "இந்தச் செயல்முறை மற்றும் நடைமுறை 2026 பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது. எனவே, இப்போதிலிருந்து 2026-க்கு இடையில் கணிசமான எண்ணிக்கையிலான மாற்றங்கள் இருக்கும் என்று நான் யூகிக்கிறேன்" என்று கூறினார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கு (renewals) $100,000 என்ற கட்டணத்தை சமீபத்தில் விதித்தது. எனினும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் புதிய முறைக்கு வர மாட்டார்கள் என்றும், அவர்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் அமெரிக்காவிற்குள் சென்று வரலாம் என்றும் வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. லட்னிக், டிரம்ப் ஹெ-1பி பிரகடனத்தில் கையெழுத்திட்டபோது அவருடன் நின்றார். அனைத்து ஹெச்-1பி விசாக்களுக்கும் ஆண்டுதோறும் $100,000 கட்டணம் இருக்கும் என்று அவர் முதலில் கூறியிருந்தார்.
லட்னிக், $100,000 கட்டணத்தால், "குறைந்தபட்சம் இந்த நபர்களால் இது ஆக்கிரமிக்கப்படக்கூடாது (overrun)" என்று கூறினார். "ஆனால் நீங்கள் எதிர்காலத்தில் ஒரு உண்மையான, சிந்தனைமிக்க மாற்றத்தைக் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அதுதான் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹெச்-1பி விசாக்களுக்கான லாட்டரி முறை எவ்வாறு செயல்படும் என்பது குறித்துக் கேள்விகள் இருந்தாலும், 2026 பிப்ரவரிக்குள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், இப்போதைக்கு (as of now) உள்ளே நுழைய $100,000 ஒரு முறை கட்டணம் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹெச்-1பி என்பது லாட்டரி என்று கூறிய லட்னிக், உலகின் 2 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் தான் பேசியபோது, அவர்கள் "அமெரிக்காவிற்குள் வரும் திறமையான தொழிலாளர்களுக்கு லாட்டரி நடத்துவது வினோதமானது (bizarre)" என்று கூறியதாகத் தெரிவித்தார்.
1990-ல் அமைக்கப்பட்ட ஹெச்-1பி செயல்முறை "போகும் வழியில் சிதைக்கப்பட்டுவிட்டது" என்றும், இந்த நடைமுறையை மாற்ற ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் அவர் கூறினார். இந்த விசாக்களுக்கு 7 முதல் 10 மடங்கு "அதிகப்படியான விண்ணப்பங்கள் வருகின்றன" (oversubscribed) என்றும், அதில் 74% தொழில்நுட்ப ஆலோசனையுடன் (Tech Consulting) தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஹெச்-1பி விசாக்கள் தொழில்நுட்ப ஆலோசகர்களுக்கானதா? தொழில்நுட்ப ஆலோசகர்கள் கடலுக்கு அப்பால் (offshore) இருப்பதை விட கரைக்கு அருகில் (onshore) இருப்பது எப்படியோ முக்கியம் என்பதுபோல... அவர்கள் அனைவரும் எப்படியும் மற்ற நாடுகளில்தான் இருக்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த லாட்டரி முறை சரி செய்யப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா திறமையானவர்களுக்கு மட்டுமே "அதிகத் திறமை தேவைப்படும் வேலைகளை" வழங்க வேண்டும் என்றும் லட்னிக் வலியுறுத்தினார். மருத்துவர்கள், கல்வியாளர்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் நிறுவனங்கள் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினால், அவர்கள் அதிக ஊதியம் பெறும் நபர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"குறைந்த செலவில் உள்ள தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இங்கே வந்து தங்கள் குடும்பங்களைக் கொண்டுவரும் யோசனை அகற்றப்பட வேண்டும். இது முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன், அது எனக்கு உடன்பாடில்லை," என்று லட்னிக் தனது வலுவான கருத்தைப் பதிவு செய்தார். இந்த மாதம், அமெரிக்க தொழிலாளர் துறை (US Department of Labour) 'புராஜெக்ட் ஃபயர்வாள்' (Project Firewall) என்ற ஹெச்-1பி அமலாக்க முயற்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.
திறமையான அமெரிக்க தொழிலாளர்களின் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது தகுதியுள்ள அமெரிக்கர்களுக்கு முதலாளிகள் முன்னுரிமை அளிப்பதை இந்த முயற்சி உறுதி செய்யும். அத்துடன், ஹெச்-1பி விசா நடைமுறையை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தினால், அவற்றைத் தண்டிக்கவும் இது வழிவகுக்கும்.
அமெரிக்க தொழிலாளர் துறைச் செயலர் லோரி சாவெஸ்-டிஆர்மெர் (Lori Chavez-DeRemer), "மோசடி மற்றும் முறைகேடுகளை வேரறுப்பதன் மூலம், மிகவும் திறமையான வேலைகள் முதலில் அமெரிக்கர்களுக்குச் செல்வதை தொழிலாளர் துறை மற்றும் எங்கள் கூட்டாட்சிப் பங்காளர்கள் உறுதி செய்வார்கள்," என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.