/indian-express-tamil/media/media_files/2025/05/05/jk2FXbet37VhZ8wH9Hq0.jpg)
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி; டிரம்ப் அடுத்த அதிரடி!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முக்கியமாக வரி விதிப்பதில் மும்முரமாக இருந்துவருகிறார். தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது. இதுகுறித்து தனது Truth Social தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
அமெரிக்காவில் திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க ஸ்டுடியோக்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை கவர்ந்திழுக்க லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக மற்ற நாடுகளை விமர்சித்தார். இதனால் ஹாலிவுட் உட்பட திரைப்படத்துறை அமெரிக்காவிற்குள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். எனவே இது பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று விவரித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Trump announces 100% tariff on movies produced outside US
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும். வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவித்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு திரைப்படத் தயாரிப்புக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை டிரம்ப் வலியுறுத்தினார். மேலும், "அமெரிக்காவில் மீண்டும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார். தற்போது விதிக்கப்படும் புதிய கட்டணங்கள், போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க மண்ணில் ஸ்டுடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
சீனப் பொருட்களுக்கு டிரம்ப் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிகளை விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா தனது சந்தையில் அனுமதிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், தற்போது டிரம்பின் வெளிநாட்டுத் தயாரிப்பு படங்களுக்கு 100% வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வரி கொள்கை ஹாலிவுட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு பதிலாக, எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோயிலிருந்து இன்னும் மீண்டு வரும் டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற முக்கிய ஸ்டுடியோக்களை இந்த வரி நடவடிக்கை மேலும் பாதிக்கின்றன என்றுCNNஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சினிமாவுக்கு 2-வது பெரிய சந்தையாக சீனா உள்ளது. சமீப காலங்களில், உள்நாட்டு சீன திரைப்படங்கள் ஹாலிவுட் இறக்குமதியை விட அதிகமாக உள்ளன.
டிரம்ப் கடந்த மாதம் உலகளாவிய வர்த்தக நாடுகளுக்கு 10 முதல் 50% வரைபரஸ்பர கட்டணங்களை அறிமுகப்படுத்தினார். அவர் அவற்றை 90 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். ஆனால், சீன தயாரிப்புகளுக்கு 125% வரி தொடர்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.