/indian-express-tamil/media/media_files/2025/10/09/israel-and-hamas-have-signed-off-2025-10-09-08-28-38.jpg)
காசா அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் அனைத்துப் பணயக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை அன்று அறிவித்தார். இது குறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "எங்களது அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், எகிப்தில் பேச்சுவார்த்தையாளர்கள் பணியாற்றி வந்த 2 முக்கியப் பிரச்னைகள் குறித்து விவரித்தார்: பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசாவின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுதல் ஆகும். இது ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான அமைதியை நோக்கிய முதல் நடவடிக்கையாக, அனைத்துப் பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டுக்குத் திரும்பப் பெறுவார்கள்" என்று டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதிபர் டிரம்ப் இந்தப் பதிவை வெளியிடுவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர், வெளியுறவுச்செயலர் மார்கோ ரூபியோ அவரிடம் ஒரு குறிப்பை அளித்தார். அதில், "சீரான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து நீங்க முதலில் அறிவிக்கும் வகையில், ஒரு Truth Social பதிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்துப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், "மத்திய கிழக்கில் ஒரு உடன்படிக்கைக்கு மிக அருகில் இருப்பதாக வெளியுறவுச் செயலர் கொடுத்த குறிப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் என்னை விரைவாகத் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார்.
ஒப்பந்தத்தை அறிவித்த டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் மேலும், "இது அரபு மற்றும் முஸ்லிம் உலகிற்கும், இஸ்ரேலுக்கும், சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் சிறந்த நாள். இந்த வரலாற்று சிறப்புமிக்க மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வு நடக்க எங்களுடன் இணைந்து உழைத்த கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களுக்கு நாங்க நன்றி தெரிவிக்கிறோம்," என்று குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் "காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தரப்பிலிருந்தும், "காசாவில் போர் முடிவுக்கு வருவதை, ஆக்கிரமிப்புப் படை அங்கிருந்து வெளியேறுவதை, உதவிப் பொருட்கள் உள்ளே வருவதை, மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம்" கையெழுத்தாகி உள்ளது என்று ஹமாஸ் குழு ஒரு அறிக்கையில் அறிவித்து உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.