முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் எப்போதும் பிரச்சினை இருக்கும். அவ்வப்போது ட்ரம்ப் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாகுவதும், அதனை நீக்குவதையும் வாடிக்கையாக வைத்திருந்தது. அந்த வகையில், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் குற்றச்சாட்டியதாக அவரது ஆதரவாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. இப்பிரச்சினை விஷவருபம் எடுத்திட, ஜோ பைடன் பதவியேற்ற போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பின்னால் முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, அவரது பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டன. சுமார் 9 மாதங்களாக சமூக வலைதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ட்ரம்ப், பொறுத்தது போதும் என அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளார். இந்த வலைதளம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தை டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், "ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளேன். பேச்சு உரிமைக்கு எதிராக செயல்படும் பெரிய டெக் நிறுவனங்களை எதிர்க்கும் நோக்கிலே தொடங்கப்பட்டுள்ளது.ட்விட்டர் தளத்தில் தாலிபான்கள் அதிகளவில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தடை இல்லை. ஆனால் முன்னால் அமெரிக்க அதிபரான எனக்குத் தடை விதித்துள்ளனர்.இது ஏற்புடையதல்ல" என்றார்.
இந்த செயலி நாடு முழுவதும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் கொண்ட விடியோ சேவையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil