/indian-express-tamil/media/media_files/2025/08/16/trump-putin-2025-08-16-07-07-20.jpg)
2022-ல் டிரம்ப் அதிபராக இருந்திருந்தால்... உக்ரைன் போர் நடந்திருக்காது: புதின் கருத்து
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் ஆங்கரேஜ் ராணுவப் படைத் தளத்தில் நேற்றிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 மணிநேரத்திற்கு பின்னர் டிரம்ப்-புதின் இடையேயான போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது டிரம்பை புதின் புகழ்ந்து பேசினார். புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். 2022 தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது எனக் கூறியிருந்தார். அது உண்மைதான், அதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு நான் உடன்படுகிறேன் என்றார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என்றும் புதின் கூறினார்.
டிரம்புடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அவரது தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும், புதினுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அதிபர் ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரும் பங்கேற்றனர். 3 பேர் கொண்ட குழுக்களாக நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். ஆனால், அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும், அவர்கள் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை, மேலும் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகும் கேள்விகள் ஏற்கவில்லை.
டிரம்ப் கூறும்போது, “நாங்கள் பல விஷயங்களில் உடன்பட்டோம். ஒருசில பெரிய விஷயங்களில் இன்னும் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்றாலும், சில முன்னேற்றங்களை சாதித்துள்ளோம்,” என்றார். மேலும், “உடன்பாடு எட்டப்படும் வரை அது உடன்பாடாகாது,” என்றும் அவர் கூறினார். 2-வது கூட்டம் அதிக ஆக்கப்பூர்வ ஒன்றாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
மறுபுறம் பேசிய புதின், உக்ரைன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தையின் முடிவுகளை நேர்மறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், "ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது" என்றும் எச்சரித்தார். “இன்றைய உடன்படிக்கைகள் உக்ரைன் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிகாட்டியாக மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நடைமுறை உறவுகளை மீட்டெடுப்பதற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று புதின் தெரிவித்தார்.
உக்ரைன் மோதலுக்கு நீண்டகால அமைதியை எட்ட, அதன் "மூல காரணத்தை" அகற்ற வேண்டும் என்று புதின் மீண்டும் வலியுறுத்தினார். இது ரஷ்யா போரை நிறுத்துவதற்குத் தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.