/indian-express-tamil/media/media_files/2025/05/26/Rxy5el1AqEEXSkNuaBHS.jpg)
உக்ரைனுடன் ரஷ்யா நடத்தி வரும் போரின் தீவிரமயமாதல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "முற்றிலும் முட்டாள்தனம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரே இரவில் 367 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடுத்து ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. இது போர் தொடங்கியதில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தாக்குதல் எண்ணிக்கையாகும்.
ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட பதிவில், பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதால், புதின் "தேவையற்ற முறையில் பலரைக் கொல்வதாக" டிரம்ப் குற்றம் சாட்டினார்.
"ரஷ்யாவின் விளாடிமிர் புதினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்தது, ஆனால் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது. அவர் முற்றிலும் முட்டாள்தனமாக செயல்படுகிறார்" என்று டிரம்ப் நேற்று (மே 25) இரவு குறிப்பிட்டிருந்தார். "எந்தக் காரணமும் இல்லாமல் உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகின்றன" என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ நடத்திய இந்த தாக்குதல்களுக்கு பிறகு டிரம்பின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரே இரவில் 367 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன. உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, போர் தொடங்கியதில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். கீவ் மற்றும் பிற நகரங்கள் மீதான இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
'புதினுக்கு முழு உக்ரைனும் வேண்டும்'
"அவருக்கு உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமல்ல, முழு உக்ரைனும் வேண்டும் என்று நான் சொல்லி வந்தேன். அது சரியாக நிரூபிக்கப்படலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்!" என்று டிரம்ப் தெரிவித்தார்.
அதே பதிவில், ஜெலென்ஸ்கியையும் டிரம்ப் விமர்சித்தார். "அவர் (ஜெலென்ஸ்கி) கூறும் அனைத்தும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனக்கு அது பிடிக்கவில்லை; அது நிறுத்தப்பட வேண்டும்," என்று அவர் எழுதினார். "தான் பேசுவதன் மூலம் ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கு எந்த நன்மையும் செய்வதில்லை" என்றும் டிரம்ப் கூறி இருந்தார்.
சமீபத்திய ரஷ்ய தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா "மௌனமாக" இருப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதற்கு மத்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில், ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு டிரம்ப், நியூ ஜெர்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவருக்கு [புதின்] என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன நடந்தது? அவர் பலரைக் கொல்கிறார்" என்று டிரம்ப் கூறினார்.
'இந்த போர் என்னுடையது அல்ல'
சமாதானத் தூதுவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட டிரம்ப், தனது தலைமையில் இந்த மோதல் தொடங்கியிருக்காது என்று குறிப்பிட்டார். "இது ஜெலென்ஸ்கி, புதின் மற்றும் பைடனின் போர், டிரம்பின்' போர் அல்ல" என்று அவர் கூறினார். "நான், இந்த தீயை அணைக்க மட்டுமே உதவுகிறேன். இது வெறுப்பினால் தொடங்கப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த புதிய தாக்குதலுக்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியம் மாஸ்கோ மீது புதிய தடைகளை விதித்தது. டிரம்ப், ரஷ்யா மீதான வரிகள் மற்றும் தடைகளை அதிகரிப்பதாக கூறினாலும், அவர் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.