/indian-express-tamil/media/media_files/2025/10/21/trump-threatens-china-2025-10-21-08-30-26.jpg)
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155% வரி... சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் ஒரு "நியாயமான வர்த்தக ஒப்பந்தம்" எட்டப்படாவிட்டால், அந்நாட்டு பொருட்கள் மீது 155% வரை வரி விதிக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை மேசையில் தீர்க்கப்பட வேண்டிய தனது முக்கியக் கோரிக்கைகளான அரிதான கனிமங்கள், ஃபெண்டானில் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
சீனாவுக்கு 155% வரி எச்சரிக்கை
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக்கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அவர்கள் 55% வரி செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம். அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும் என்றார் டிரம்ப்.
பல நாடுகள் முன்பு அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தின, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. வாஷிங்டன் தனது வர்த்தகப் பங்காளிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பிறகு இப்போது யாரும் சாதகமாகப் பயன்படுத்துவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், “எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது இன்னும் 2 வாரங்களில் தென் கொரியாவில் நாங்க சந்திப்போம்” என்றார்.
வரவிருக்கும் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், “எங்களிடம் எல்லாவற்றிலும் சிறந்தது உள்ளது, யாரும் அதைச் சீர்குலைக்கப் போவதில்லை... நாங்கள் மிகவும் வலுவான வர்த்தக ஒப்பந்தத்துடன் முடிப்போம் என்று நினைக்கிறேன். இருவருமே மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று மேலும் கூறினார்.
டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் லி செங்காங்கை நீக்கிவிட்டதாக சீனா உறுதிப்படுத்தியது. அவருக்குப் பதிலாக லி யோங்ஜி நியமிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.