/indian-express-tamil/media/media_files/2025/03/31/RReQGF6gqi4217tphvWe.jpg)
டிரம்ப்பின் 50% வரி இன்று முதல் அமல்: ஏற்றுமதியில் பெரும் சரிவு; ஜவுளி, ஆபரணத் துறைகள் தவிப்பு
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை அமல்படுத்த முடிவெடுத்து உள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி வரி விதிப்பால், குறைந்த லாபத்தில் இயங்கும் ஜவுளி, ஆபரணங்கள், இறால், தளவாடங்கள் போன்ற அதிக தொழிலாளர்கள் சார்ந்த துறைகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பால், 2025-26ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பு 40-45% வரை குறையக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர். உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் சுமார் 87 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டு 49.6 பில்லியன் டாலராக குறையலாம். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 3-ல் 2 பங்கு பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதே ஆகும்.
வரி விதிப்பின் பின்னணி:
பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த 50% வரியானது 2 பகுதிகளாக உள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 25% வரி. இந்தியாவின் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்கள் வாங்குவதற்கு 'தண்டனை'யாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் 25% வரி. இந்த கூடுதல் வரி புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
துறைவாரியான பாதிப்புகள்:
அமெரிக்காவின் இந்த அதீத வரியால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜவுளி மற்றும் ஆடைகள், ஆபரணங்கள் (Gems & Jewellery), இறால், இயந்திரங்கள் மற்றும் எந்திர சாதனங்கள், உலோகங்கள் (எஃகு, அலுமினியம், செம்பு), வேதியியல் பொருட்கள், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் காலணிகள், கையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் கார்பெட்டுகள் ஆகியன.
குறிப்பாக, வைரப் பட்டை தீட்டும் துறை, இறால் மற்றும் வீட்டு உபயோக ஜவுளித் துறைகள் அமெரிக்கச் சந்தையை அதிகம் நம்பியுள்ளதால், அவற்றின் விற்பனை கடுமையாகச் சரியும் என வர்த்தக வல்லுநர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக, இறால் ஏற்றுமதியாளர்களுக்கு வரும் வருவாயில் 48% அமெரிக்காவில் இருந்து கிடைக்கிறது.
வேலைவாய்ப்பு அச்சுறுத்தல்:
GTRI-ன் அறிக்கையின்படி, ஜவுளி, ஆபரணங்கள், இறால், கார்பெட்டுகள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகள், ஏற்றுமதியில் 70% சரிவைக் காணக்கூடும். இதனால், இந்தத் துறைகளில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியின் மதிப்பு 18.6 பில்லியன் டாலராகக் குறைந்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
தொழில்துறையின் கோரிக்கைகள்:
இந்த கடுமையான வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ள, ஜவுளி மற்றும் ஆபரணங்கள் துறையினர் மத்திய அரசிடம் ஆதரவு கோரியுள்ளனர். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிக்கு ஈடாக, 25-50% வரியை அரசு திரும்ப செலுத்த வேண்டும் அல்லது வரிச் சலுகை வழங்க வேண்டும் என ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக பண உதவி அளிக்குமாறும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறும் ஜவுளித் துறை கேட்டுக் கொண்டு உள்ளது. அத்துடன், ஐரோப்பிய யூனியனுடன் (EU) தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு அரசை வலியுறுத்தி உள்ளது.
வரி விலக்கு பெற்ற பொருட்கள்:
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 30% (மதிப்பு $27.6 பில்லியன்) அமெரிக்காவில் வரி விலக்கு பெறும் என GTRI மதிப்பிட்டுள்ளது. இதில் முக்கியமானவை: மருந்துப் பொருட்கள் ($12.7 பில்லியன்), மின்னணு சாதனங்கள் ($10.6 பில்லியன்), பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் பொருட்கள் ($4.1 பில்லியன்). இருப்பினும், இந்த பொருட்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் அவற்றுக்கும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த வரி விதிப்பால், வியட்நாம், வங்கதேசம், கம்போடியா மற்றும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா 20% பங்கு வகிப்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2% பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.