இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் நேற்று ஒமைக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அதே சமயம், தென்னாப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்வதற்கு அதிகமான நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா தொற்று பரவ தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்தும், பல உருமாற்றங்களால் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தப் புதிய வகை கொரோனா, உலகளாவிய கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசு அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிப்பதாகவும், புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இரண்டு ஒமைக்ரான் கொரோனா வகைகளும், தென் ஆப்பிரிக்கா பயணிகளிடம் கண்டறியப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்ஸ்சன் கூறுகையில், " இங்கிலாந்து வருபவர்கள் இரண்டாவது நாள் இறுதிக்குள் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். சோதனை முடிவில் நெகட்டிவ் வரும் வரை, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம், ஒமைக்ரான் பாதிப்பு நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் 10 நாள்கள் சுய தனிமைப்படுத்தல் கடைப்பிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முனிச் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு தென் ஆப்பிரிக்கா பயணிகளிடம் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நபர், மொசாம்பிக்கில் இருந்து மிலனுக்கு வருகை புரிந்துள்ளார். அதே சமயம், அந்நபர் சில நாள்கள் நம்பியாவிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
பி.1.1.529 என்ற அறிவியல் பூர்வ பெயரை கொண்ட இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடு என வகைப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும், அதி வீரியமிக்க வைரஸாக இருக்கக்கூடும் என தெரிவிக்கிறது.
ஆம்ஸ்டர்டாம் விமானங்கள்
வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டு விமானங்களில் ஆம்ஸ்டர்டாமுக்கு வந்த சுமார் 600 பேரில் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட சோதனையில் தான் புதிய வகை பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
பயண கட்டுப்பாடுகள்
புதிய ஒமைக்ரான் கொரோனா காரணமாக, எட்டு தென் ஆப்பிரிக்கா நாடுகள் பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோல், ஒன்பது தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் அல்லாதவர்கள் நுழைய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், அங்கிருந்து வரும் ஆஸ்திரேலியா குடிமக்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, ஓமன், குவைத் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளும் புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாடுகள் அதிகளவிலான ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஐரோப்பாவில் பல நாடுகள் ஏற்கனவே கொரோனா பாதிப்புடன் போராடி வரும் நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தலால் அதன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.
தடுப்பூசி கவலை
இந்த புதிய வகை கொரோனா, உலக நாடுகளில் போடப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸை வழங்கி வந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 7 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் முதல் டோஸை மட்டுமே செலுத்தியுள்ளனர்.
GAVI தடுப்பூசி கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரி சேத் பெர்க்லி கூறுகையில், " WHO உடன் இணைந்து COVAX உதவியுடன் தடுப்பூசியை உலக நாடுகளுக்கு விநியோகிப்பது அவசியமாகும். ஒமைக்ரான் குறித்த அறிய இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலும், உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் தடுப்பூசி போடாத வரை, மாறுபாடுகள் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கும். வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கும்.
பணக்கார நாடுகள் இல்லாமல் அனைத்து பகுதிகளைப் பார்வையிட்டால் மட்டுமே மாறுபாடுகளைத் தடுத்திட முடியும் என கூறுகிறார்.
இந்த புதிய வகை கொரோனா மாற்றத்தை புரிந்துகொள்ளவும், அதற்கு எதிராக நமது தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அறியவும் சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.