உலகம் முழுவதும் கொரோனா நோய் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர். பொதுமக்களின் தேவை அறிந்து, பல அரசுகள் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறது. இந்நோயின் தாக்குதல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்நிலையில் நேற்றிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 10 நாட்களாக, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்த இங்கிலாந்து பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பல்வேறு முக்கியமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதாலும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கும் கொரோனா நோய் தொற்று இருந்ததை அறிந்து பொதுமக்கள் அச்சமடைந்திருக்கும் நிலையில் போரிஸ் ஜான்சனின் நிலை கவலை அளிப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எலிசபெத் மகாராணி நேற்றிரவு இங்கிலாந்து நாட்டு மக்களிடம் உரையாடினார். நாம் அனைவரும் ஒன்றாக இந்த நோய்க்கு எதிராக போராடுவோம். இந்த நோயை வெல்லுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நாம், நம் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடன் மீண்டும் சேர்ந்து நாட்களை நிம்மதியாக கழிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.