உக்ரைன் எல்லைக்கு அருகே 100க்கும் அதிகமான புதிய ரஷிய ராணுவ வாகனங்களும், போரில் காயமடைபவர்களுக்கு உதவும் வகையில் சிறிய மருத்துவ சிகிச்சை மைய குடில்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள் புகைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டது.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, 18-60 வயதுக்குள்பட்டவர்களை ஒரு வருட ராணுவ சேவைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சோவியத் யூனியன் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக் கொள்ள ரஷியா முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.
இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷியா குவித்துள்ளது.
அதே வேளையில் போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி விட்டதாகவும் ரஷியா கூறியிருந்தது.
ஆனால் தொடக்கம் முதலே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷியா போர் தொடுக்க ஆயத்தமாகி வருகிறது என்று குற்றம்சாட்டி வந்தன.
அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரான்ஸ் முயற்சி செய்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முதல் கட்ட பொருளாதாரத் தடைகளை ரஷியாவுக்கு எதிராக பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தெற்கு பெலாரஸ் அருகே உக்ரைன் எல்லையில் ராணுவ வாகனங்கள் நூற்றுக்கணக்கானவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய புதின் உத்தரவிட்ட நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள 2 பிராந்தியங்களை தனி நாடுகளாகவும் புதின் அறிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை.. அதிகரிக்கும் கொரோனா.. மேலும் செய்திகள்
முன்னதாக, ரஷியா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கி விட்டதாக இங்கிலாந்து குற்றம்சாட்டியிருந்தது.
பிரச்சனைகளை தீர்க்க பொருளாதார தடைகள் சிறந்த வழி என்று நினைக்கவில்லை என்று சீனா தெரிவித்தது.
உக்ரைன் விவகாரத்தை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. அங்கு நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்துக்கு விளக்கி வருகிறது.
இந்நிலையில், பிலிப் கிரெளத்தர் என்ற செய்தியாளர் 6 மொழிகளில் உக்ரைன் விவகாரத்தை செய்தியாக விவரித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஆங்கிலம், போர்ச்சுகீஸ், லக்ஸம்போர்கிஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் உக்ரைன் விவகாரத்தை விளக்கி கூறியுள்ளார்.
இவர் உக்ரைனில் உள்ள கிய்வ் நகரில் இருந்து செய்திகளை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவும் ரஷியா மீது கூடுதல் தடைகளை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil