உலகம் முழுவதும் கொரோனா: பாதிப்பு 42.37 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 42.37 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 37 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 350 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 59 லட்சத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுதாபியில் ஆளில்லா விமானக் கண்காட்சி
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. 5-ஆவது ஆண்டாக இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
ஆளில்லா விமானம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன உத்திகள், பாதுகாப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரரங்கள் இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். இந்த கருத்தங்கில் 150-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.
ஜெர்மன் பொருளாதார வளர்ச்சி அமைச்சருடன்
வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சில தினங்களுக்கு முன் ஜெர்மனி சென்றார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்.
அந்தவகையில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பாயர்போக்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர் பதற்றம் மற்றும் ஆப்கன் விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்வென்ஜா ஷூல்ஸை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், “எங்கள் தனித்துவமான வளர்ச்சி கூட்டாண்மைக் கண்ணோட்டத்தைப் பற்றி விவாதித்தோம். பசுமை வளர்ச்சி மற்றும் சுத்தமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அமிராப்தோல்லையன், சுலோவேனிய வெளியுறவு அமைச்சர் ஆன்சி லோகர், சவுதி அரேபிய அமைச்சர் பைசல் பின் பர்கான் அல் சவுத், ஆஸ்திரியா அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை ஜெய்சங்கர் சந்தித்தார். முனிச் பாதுகாப்பு மாநாட்டை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் இன்று (பிப். 20) பிரான்ஸ் செல்கிறார்.
உக்ரைன்: பிரிவினைவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல்
உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா எந்தவொரு நேரத்திலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில் உக்ரைனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
சோவியத் ஒன்றியம் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்து கொள்ள ரஷியா முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.
இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷியா குவித்துள்ளது.
அதே வேளையில் போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி விட்டதாகவும் ரஷியா கூறி வருகிறது.
ஆனால் ரஷியா கூறுவதில் உண்மையில்லை எனவும், அந்த நாடு உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முழு வீச்சில் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இதற்கிடையில் ரஷியாவுடன் அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டன்ட்ஸ்க் மாகாணத்தில் தனிநாடு கோரி போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மாகாணத்தின் ஒரு பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
இதை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் போர்நிறுத்தத்தை உக்ரைன் மீறிவிட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது.
இதனிடையே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், ராணுவத்தின் பீரங்கி குண்டு வீச்சில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை கூட்டம் கூட்டமாக வெளியேற்றி வருகின்றனர். அவர்களை பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் ரஷியாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ரஷியா வேண்டுமென்றே டன்ட்ஸ்க் மாகாணத்தில் பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்க நாடகமாடி வருவதாக குற்றம் சாட்டியது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வருகிற 24-ந்தேதி அமெரிக்கா- ரஷியா இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் சந்திப்பு நடைபெறும் என தெரிவித்த ஜோ பைடன் சந்திப்புக்கு முன்பாக ரஷியா போரை தேர்வு செய்தால் அந்த நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.
முன்னாள் அதிபர் டிரிம்ப்பின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஆதரவாளர்களை தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மேல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6 ஆம் தேதி வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரஷியா மீது அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு.. ஐரோப்பாவை தாக்கிய புயல்.. மேலும் உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி டிரம்ப் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வன்முறையாளர்களை டிரம்ப் தூண்டியதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், முன்னாள் அதிபர் என்பதற்காக அவருக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.