இலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், இராணுவ அதிகாரிகள் மீதான பொருளாதாரத் தடைகள் குறித்தும் விசாரிக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் அழைப்பு விடுத்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த மைக்கேல் பேச்லெட் முதன் முறையாக பரிந்துரைத்துள்ளார். தமிழ் கிளர்ச்சியாளர்கள் உட்பட போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினர் .
இந்த 17 பக்க அறிக்கையில், “நம்பகமானதாகக் கூறப்படும் குற்றவாளிகள் மீது பயணம் மேற்கொள்வதற்கான தடைகள், சொத்துக்கள் முடக்கம் போன்ற பொருளாதார தடைகளை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வா இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாகவும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னாவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டதற்கு மைக்கேல் பேச்லெட் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி கட்ட ஈழப்போரின் இறுதி கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, படைத்தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது, ஏற்கனவே அமெரிக்கா நாடு பயணத் தடையை விதித்தது.
சுயாதீன விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இலங்கை அரசு, இலங்கையின் படைத்தரப்பினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்போம் என்று பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூடும் நிலையில், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு விசாரிக்கும் என கடந்த வாரம் தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், தமிழ் சிவில் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு கடிதம் எழுதின.
இனப்படுகொலை, போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும். ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை போன்றதொன்றை (கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு) ஏற்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்தன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook