ஐ.நா. அதிர்ச்சி தகவல்: கடந்த ஆண்டில் மட்டும் 10,000 குழந்தைகள் கொலை!

தாக்குதல்களில் காயம்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் 2016ஐ விட 2017ல் அதிகமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

புதன் கிழமையன்று ஐநா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போர்களின் விளைவாக கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் போர் சூழல் மிகுந்த பகுதிகளில் வாழும் பல குழந்தைகளை பாலியல் தேவைகளுக்காகவும், ராணுவ தேவைகளுக்காகவும் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. போர் சூழலில் வான்வழி தாக்குதல்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை தாக்குதல்களில் காயம்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் 2016ஐ விட 2017ல் அதிகமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஐநா இது குறித்து பேசும் போது, இதற்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவும், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்து ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் அரபு நாடுகளும் தான் என குற்றம் சாட்டியிருக்கின்றது. ஏமன் நாட்டில் சவுதி அரேபிய மற்றும் அமீரகம், அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு நடத்திய தாக்குதல்களில் மட்டும் 1300 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இறந்த குழந்தைகளில் சிலர் தீவிரவாதக் குழுக்களில் வீரர்களாகவும் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இருக்கும் அதே உரிமைகள் இவர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து உலக நாடுகள் செயல்பட வேண்டும். அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்” என்று ஐநாவின் குழந்தைகள் நலனுக்கான பிரதிநிதி விரிஜினியா கம்பா தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஆண்டு மட்டும் 21,000 குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் பதிவாகியிருக்கின்றது. அதில் 10,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஈராக், மியான்மர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, தெற்கு சூடான், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகமாக உள்ளன. 2016ல் இந்த வன்முறைகள் 15,500 என்ற அளவில் தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையில் வெளியிடப்பட்ட சில முக்கியத் தகவல்கள்

  1. 881 குழந்தைகள் நைஜீரிய நாட்டில் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் சிலரை மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தி இருக்கின்றார்கள். போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடைய காரணத்தால் 1,900 குழந்தைகளை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றார்கள்.
  2. 1,036 குழந்தைகளை ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் ஈராக்கில் காவல்துறை கண்காணிப்பில் இருக்கின்றார்கள்.
  3. தெற்கு சூடானில் 1,221 குழந்தைகளை இராணுவ வீரர்களாக பயன்படுத்தி வருகின்றார்கள்.
  4. சோமாலியாவில், அல்-சஹாப் என்ற பயங்கரவாத குழுக்கள் சுமார் 1600 குழந்தைகளை கடத்தியிருக்கின்றது. அதில் சில குழந்தைகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஏனையோர் பாலியல் தேவைகளுக்காக வன்முறையை அனுபவித்து வருகின்றார்கள்.
  5. சிரியா, மியான்மர், ஏமன் போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்பட்டு வருகின்றது.
  6. உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளின் அரசே இது போன்ற குற்றங்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்று கம்பா தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close