அமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டிப்பதற்காக 129 இந்திய மாணவர்கள் உட்பட 130 வெளிநாட்டு மாணவர்கள் போலி பல்கலைக்கழகத்தில் இணைந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து புதுடெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, இந்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. "அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. அவர்களை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் விசாவில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிபவர்களை பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்டிருந்த உள்நாட்டு பாதுகாப்பு நிர்வாகத்தினர் தான் இந்த 130 மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.
”இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்க வந்த மாணவர்களுக்கு, இந்த ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பவர்களோ, வகுப்புகளோ இல்லை என்பதும், நாம் மோசடி செய்து தான் அங்கு செல்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்” என இந்த விஷயம் பற்றி, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, போலி விசாவை நீட்டித்துத் தரும் குழுவைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய மற்றும் இந்திய - அமெரிக்க குடிமகன்கள் ஆவர்.
வகுப்புகள் இல்லாத, குறைந்த கட்டணம் மற்றும் பணிபுரிய அனுமதி வழங்கியிருக்கும் இந்த போலி பல்கலைக் கழகத்தில், 600 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை உண்மையில் அதிகமானது. அதில் சிலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர்.
”ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,96,000 இந்திய மாணவர்கள் படித்தனர்.
அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையில் கல்வி பரிமாற்றத்தின் பெருமைமிக்க வரலாற்றில் இப்படி மோசடி ஏற்பட்டது ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு” என்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
நமது பல்கலைக் கழகங்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் சர்வதேச மாணவர்கள் மதிப்புமிக்க சொத்தாக திகழ்கிறார்கள். சமூகத்தை, திறன்களை கற்றுக் கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளவும் அவர்கள் முக்கியம் என்ற மற்றொரு அதிகாரி, இந்திய மாணவர்களுக்கு வருடத்திற்கு 6 பில்லியன் சம்பளம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்காக ஆயிரக்கணக்கான வேலைகள் இங்கு இருக்கின்றன. சில மாணவர்கள் இப்படி மோசடி செயலில் ஈடுபட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றார்.
”பல மாணவர்கள் இந்த போலி பல்கலைக்கழகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இந்த பல்கலைக்கழக கல்லூரிகளில் பெரும்பாலானவை அங்கீகாரம் பெறாதவை. இது தெரியாமல் பல மாணவர்கள் பணி அனுமதியைப் பெற இங்கு சேர்ந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு மாணவர்கள். இப்போது அவர்களின் கனவுகள் உடைந்து போயிருக்கின்றன" எனத் தங்களது வருத்தத்தை வட அமெரிக்கா தெலுங்கு சங்கத்தினர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகம் 129 இந்திய மாணவர்களுக்கு உதவ 24/7 தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது. துயரத்தில் உள்ள அம்மாணவர்களுக்கு உதவ ஒரு நோடல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.