பயங்கரவாதி ஹபீஸை கைது செய்ய வலியுறுத்தி பாக்., விரையும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!

ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், தீவிரவாதி ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக அடுத்த வாரம் பாகிஸ்தானிற்கு செல்கிறது

ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில், தீவிரவாதி ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக அடுத்த வாரம் பாகிஸ்தானிற்கு செல்கிறது.

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக உள்ள ஹபீஸ் மீது பாகிஸ்தான் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் பிரதமர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சமீபத்தில் அமெரிக்காவின் உள்துறை செய்தித்தொடர்பாளர் ஹேதர் நோவர்ட் (Heather Nauert) தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஷாகித்கான் அப்பாஸி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஹபீஸ் சையத்தை ’சாஹிப்’அதாவது சார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் முக்கியமான தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஹபீஸ் சையத் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அரசின் மீதான எங்களின் நிலைபாடு எப்போதும் மாறியதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கிய 2 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு ரத்து செய்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அமெரிக்கா கூறியிருந்தது.

இந்த நிலையில், ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக அடுத்த வாரம் பாகிஸ்தானிற்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐ.நாவின் பாதுகாப்பு கமிட்டி ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு பாகிஸ்தானிற்கு வருகிறது” என்றார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிற்கு சென்று, ஹபீஸ் மீதும், அவருடன் தொடர்பு வைத்திருக்கும் மற்ற இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டை நிர்பந்திக்கும் என தெரிகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close