உலகின் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழ்வில் வியாழக்கிழமை உரையாற்றும் போது இவ்வாறு அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாகும். அங்கு அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் ஆளும் கட்சியின் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் இவ்வாறு வெளிப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர் பேசுகையில், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் அல்லது ஜிஹாதி பிரிவினரின் கைகளில் சிக்கக்கூடும் என்று மேற்கு நாடுகளில் பல தலைவர்கள் கவலைப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபரின் கருத்துகள் தமக்கு ஆச்சரியம் அளிக்கின்றன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பூட்டோ சர்தாரி கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விரைவாக வெளியேறுவது பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பிற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில் அதிபர் பிடன் தனது உரையில், உலகம் வேகமாக மாறி வருவதாகவும், நாடுகள் தங்கள் கூட்டணிகளை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து, அமெரிக்கா உலகை முன்னெப்போதும் இல்லாத இடத்திற்கு இட்டுச் செல்லும் திறன் கொண்டது என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில், பயங்கரவாதம் மற்றும் மதவெறி வன்முறை காரணமாக பாகிஸ்தானுக்கு, குறிப்பாக அதன் அமைதியான மாகாணங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது நினைவு கூரத்தக்கது.
முன்னதாக, செப்டம்பரில் ஒரு தொலைக்காட்சி உரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “ரஷ்யாவையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க நிச்சயமாக எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவேன்” எனக் கூறினார்.
பாகிஸ்தான் தற்போது ரஷ்யா பக்கம் சாய நினைக்கிறது என்ற குற்றச்சாட்டும் வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil