Advertisment

ஐ.எஸ். தலைவர் இருப்பிடத்தை அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது இப்படி தான்… மேலும் டாப் 5 உலக நிகழ்வுகள்…

இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு விதிக்குமா என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐ.எஸ். தலைவர் இருப்பிடத்தை அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது இப்படி தான்… மேலும் டாப் 5 உலக நிகழ்வுகள்…

துருக்கி எல்லையில் சிரியாவில் குடியிருப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷேமி அல்-குரைஷி, தனது இருப்பிடத்தை அமெரிக்க ராணுவம் சுற்றி வளைக்கப் போவதை அறிந்ததும் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை பிடிக்க கடந்த டிசம்பர் மாதம் முதல் அமெரிக்கா திட்டம் தீட்டி வந்தது.

மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அத்மே நகரில் ஐ.எஸ். தலைவர் குடும்பத்துடன் வசித்து வருவதை அமெரிக்கா கண்டறிந்தது.

எப்போதாவதுதான் அவரை வெளியே வருவார் என்பதையும் அமரெிக்க படை அறிந்து கொண்டது. இந்நிலையில், குடிருப்புப் பகுதி என்பதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்தது.

ஐ.எஸ். தலைவரின் இருப்பிடத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு அளித்ததன் பேரில் அமெரிக்க ராணுவப் படையினர் ஹெலிகாப்டரில் தாக்குதல் நடத்த புறப்பட்டனர்.

அதிபர் பைடன் வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த தாக்குதலை கண்காணித்து வந்தார்.

அமெரிக்க படையினர் அடுக்குமாடி குடியிருப்பை நெருங்கும் சமயத்தில் அங்கிருக்கும் பொதுமக்களை கையை உயர்த்துமாறும், நீங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவீர்கள் என்று வீரர்கள் எச்சரித்தனர் என்று அங்கிருந்து வெளியேறிய ஒரு பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மெரைன் ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி அமெரிக்கா படையினரின் தாக்குதலை மேற்பார்வையிட்டு அதிபர் பைடனுக்கு தகவலை அனுப்பிக் கொண்டிருந்தார்.

அமெரிக்கப் படையினர் இரண்டாவது தளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். அப்போது படையினர் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்து குரைஷி சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில், அவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அபு இப்ராஹிம் தலைவராக பொறுப்பேற்றார்.

அந்த அமைப்பின் தலைவராக இருந்த அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அபு இப்ராஹிம் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிபர் பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தத் தாக்குதலில் பங்கேற்ற அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நன்றி. உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த முக்கியமான பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சீன விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா

சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொங்க உள்ளது. கல்வான் பள்ளாத்தாக்கு தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்களுக்கு எதிராக சண்டையிட்ட சீன வீரரை ஒலிம்பிக் ஜோதி ஏந்திச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இதன் தொடக்க மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சியில் இந்தியா பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளும் பெய்ஜிங் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் தூதரக ரீதியில் பங்கேற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

 இந்தியா-சீன எல்லை பிரச்சனையை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகள் மூலம் தீர்த்துக் கொள்ள அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும். அண்டை நாடுகளுடன் சீனாவின் மோதல் போக்கை எதிர்த்து ஏற்கனவே குரல் கொடுத்துள்ளோம். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று  நெட் பிரைஸ் கூறினார்.

ஆப்கன் மாணவிகளுக்காக 6 மாகாணங்களில்

மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறப்பு

ஜனநாயக ஆட்சியை கலைத்து தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சிக்கு வந்தது. ஆப்கனுக்கான உரிய அங்கீகாரத்தை பல நாடுகள் இன்னும் அளிக்கவில்லை.

1990களில்  இதேபோன்று ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்வதற்கும் தலிபான் தலைமையிலான அரசு தடை விதித்தது.

இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை பெண்களுக்கு எதிராக விதிக்குமா என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படக் கூடாது என்பதே சர்வதேச நாடுகளின் கோரிக்கையும் ஆகும்.

இந்த சூழ்நிலையில் தான் ஆப்கனில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 6 மாகாணங்களில் மட்டும் மாணவிகளுக்கான அரசு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறந்துள்ளது.

தலிபான் அரசின் கலாசாரம் மற்றும் தகவல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  நங்கர்ஹார், கந்தஹார் ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலிபான் அரசின் உயர் கல்வி துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஹெல்மந்த், ஃபரா, நிம்ரோஸ், லாக்மேன் ஆகிய மாகாணங்களிலும் மகளிர் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன என்றார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைகளில்

தாக்குதல்: 13 பயங்கரவாதிகள், 7 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்நாட்டு பாதுகாப்பு நிலைகள் மீது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதிலடியில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இந்தச் சண்டையில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நோஷ்கி மாவட்டத்தில் பஞ்ச்கர் என்ற பகுதியில் இருந்த ராணுவ நிலைகள் மீது கடந்த புதன்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர்.

வெகு நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க

விழாவில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்கவுளள குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பங்கேற்கிறார்.

இவருடன் உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், எகிப்து அதிபர் அப்தெல் ஃபடா எல்-சிஸ்ஸி, செர்பியாவின் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் ஆகியோரும், சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

பெல்ட் மற்றும் சாலை முயற்சியில் சீனாவுடன் இணைந்துள்ள முதல் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவின் அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்ணான்டஸும் பங்கேற்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தூதரக ரீதியில் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கின்றன. இந்தியாவும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்தது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment