கட்டுரை: ஆமி கின் மற்றும் பால் மோசூர்
After Nancy Pelosi’s arrival in Taiwan, China announced military drills in nearby waters: அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசியின் விமானம் தைவானைத் தொட்ட சிறிது நேரத்திலேயே, சீனாவின் ராணுவம் தைவானின் கடல் எல்லையை மீறும் வகையில் பயிற்சிகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, இது சுயராஜ்ய தீவான தைவானில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சாத்தியமான மோதலுக்கு களம் அமைத்துள்ளது.
தைவானைச் சுற்றியுள்ள ஆறு மண்டலங்களுக்கான ராணுவ பயிற்சி திட்டங்களை சீனா அறிவித்தது, அங்கு வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நேரடி தாக்குதல் (ஃபையரிங்) ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானின் பிராந்திய கடல் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் "பாதுகாப்பு காரணங்களுக்காக" கப்பல்கள் மற்றும் விமானங்கள் அத்துமீறி நுழைவதற்கு எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை கூறியது.
இதையும் படியுங்கள்: இங்கிலாந்து ராணி குறித்து ஆஸ்திரேலிய எம்.பி சர்ச்சை கருத்து… உலகச் செய்திகள்
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், தைவானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள கடல் மற்றும் வான்வெளியில் செவ்வாய் மாலை முதல் தொடர்ச்சியான கடற்படை மற்றும் விமானப் பயிற்சிகளை நடத்தத் தொடங்கும் என்று சீனாவின் கிழக்கு பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஷி யி வெளியிட்டுள்ள ஒரு தனி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பயிற்சிகளில் "தைவான் ஜலசந்தியில் நீண்ட தூர நேரடி தாக்குதல்" மற்றும் தைவானிலிருந்து "கிழக்கு கடலில் வழக்கமான வழிகாட்டுதல் தாக்குதல் சோதனை" ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நான்சி பெலோசி, தைவானில் இருக்கும்போதே பயிற்சிகள் தொடங்கும் வாய்ப்பை இந்த நேர அட்டவணை வெளிப்படுத்துகிறது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தனித்தனி அறிக்கைகள், "தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாப்பதற்கு" ராணுவ பயிற்சிகளை அவசியம் என்று குறிப்பிட்டன.
சீன அரசு ஊடகம் அச்சுறுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ பீப்பிள்ஸ் டெய்லி செய்தித்தாள் செவ்வாயன்று சமூக ஊடகங்களில் "நெருப்புடன் விளையாடுபவர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்வார்கள்" என்று எழுதியது, இது கடந்த சில ஆண்டுகளாக சீன அதிகாரிகள் வெளியிட்ட இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளிப்படையாக பிரதிபலிக்கிறது.
தி குளோபல் டைம்ஸ், ஒரு தேசியவாத சீன செய்தித்தாள், ஒரு தலையங்கத்தில், "சீனாவின் எதிர் நடவடிக்கைகள் ஒரேயடியாக இருக்காது, ஆனால் நீண்ட கால, உறுதியான மற்றும் சீராக முன்னேறும் நடவடிக்கைகளின் கலவையாக இருக்கும்" என்று கூறியது.
சீன ராணுவ ஆய்வாளரான சாங் சோங்பிங், இரண்டு அறிவிப்புகளும் ஒரே பயிற்சியைப் பற்றியது என்றார். அதற்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை தொடங்கும் என்றும் ஆனால் உண்மையான நேரடி தாக்குதல் பயிற்சிகள் வியாழன் முதல் ஞாயிறு வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
"தைவானுடனான சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் போராட்டம் தீவிரமடையப் போகிறது, மேலும் இது அமெரிக்க அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல்களைச் சமாளிப்பதற்கான சக்தியின் அளவை அதிகரிக்கும்," என்று கூறிய சாங் சோங்பிங், தைவானுக்கும் சீனாவிற்கும் இடையிலான கடல் பகுதியை பிரிக்கும் ஜலசந்தியைக் கடக்கும் பயிற்சிகள் அடிக்கடி நடக்கும் என்றும் கூறினார்.
சீனா தைவான் தீவை மிரட்டுவதற்காக ஏவுகணைகளை ஏவியது மற்றும் ஜனாதிபதி பில் கிளிண்டன் அப்பகுதிக்குள் விமானம் தாங்கி கப்பல்களுக்கு உத்தரவிட்ட, 1995-96 தைவான் ஜலசந்தி நெருக்கடிக்குப் பின்னர், தற்போதைய திட்டமிடப்பட்ட பயிற்சிகள் பிராந்தியத்தில் சீன ராணுவ சக்தியின் மிகவும் உறுதியான நிகழ்ச்சியாக இருக்கும். இந்த பயிற்சிகள் சில வணிக கப்பல் பாதைகள் மற்றும் தைவான் துறைமுகங்களுக்கான அணுகலை தற்காலிகமாக தடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், பயிற்சிகள் பெரும்பாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலிமையைக் காட்டுவதற்கான ஒரு சமிக்ஞை பயிற்சியாகத் தோன்றின.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட உளவுத்துறை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தின் மூத்த சீன ஆய்வாளர் ஜோ மெக்ரெனால்ட்ஸ் கூறுகையில், "நாங்கள் இதை உண்மையில் விரும்பவில்லை என்பதையும், இதை நாங்கள் குறைவாகப் பார்க்க விரும்புகிறோம் என்பதையும் அவர்கள் சமிக்ஞை செய்கிறார்கள். நாங்கள் உடனடியாக போருக்குச் செல்லப் போகிறோம் என்பதை அவர்கள் சமிக்ஞை செய்யவில்லை," என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஒரு கவலை என்னவென்றால், வேகமாக நகரும் சூழ்நிலையானது தற்செயலான எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும், அது கட்டுப்பாட்டை மீறும். சீனாவின் நடவடிக்கைகளுக்கு தைவானும் அமெரிக்காவும் எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தைவானின் தைபேயில் உள்ள தேசியக் கொள்கை அறக்கட்டளையின் பாதுகாப்பு ஆய்வாளர் சீஹ் சுங் கூறுகையில், “சீன ராணுவப் பயிற்சிகள் தைவான் ராணுவத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொண்டுவரும். ஒரு சிறிய தவறு ஏற்பட்டால், ஜலசந்தியின் இரு தரப்பினருக்கும் இடையிலான குறைந்த நம்பிக்கை மற்றும் நெருக்கடிகளைக் கையாள்வதில் அனுபவமின்மை ஆகியவை பதட்டங்களை அதிகரிக்கும் மற்றும் மாற்ற முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்," என்று கூறினார்.
நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு பதிலடியாக சீனர்கள் மற்ற எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். செவ்வாயன்று, அவர் வருவதற்கு முன்பு, சீனா 100 க்கும் மேற்பட்ட தைவானிய உணவு ஏற்றுமதியாளர்களிடமிருந்து ஏற்றுமதிகளைத் தடை செய்தது. இது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சி ஆகும்.
தைவானின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி என்ற அந்தஸ்தை சீனா பெருகிய முறையில் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அதன் பரந்த நுகர்வோர் சந்தைக்கான தைவானின் அணுகலைக் கட்டுப்படுத்த பல முறை முயற்சித்துள்ளது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில், Su-35 போர் விமானங்கள் செவ்வாய்க் கிழமை ஜலசந்தியைக் கடப்பது பற்றிய பல சீன அரசு ஊடக அறிக்கைகள் "போலி செய்தி" என்று கூறியது. செவ்வாயன்று 21 சீன இராணுவ விமானங்கள் தைவான் அருகே வான்வெளியில் ஆய்வு செய்ததாக அமைச்சகம் தனித்தனியாக கூறியது, இது சமீபத்திய ஆண்டுகளில் தினசரி நிகழ்வாக மாறியுள்ளது.
இந்த கட்டுரை முதலில் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.