இந்தியன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா : இந்திய வம்சாவளி டிரைவருக்கு அமெரிக்க போலீஸ் பாராட்டு
Indian origin car driver saves elder woman in scam : அமெரிக்காவில் பணமோசடி விவகாரத்தில் இருந்து மூதாட்டியை, இந்திய வம்சாவளியை சேர்ந்த கார் டிரைவர் காப்பாற்றிய விவகாரம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் பணமோசடி விவகாரத்தில் இருந்து மூதாட்டியை, இந்திய வம்சாவளியை சேர்ந்த கார் டிரைவர் காப்பாற்றிய விவகாரம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், சன்சிட்டி நகரில், வாடகை கார் ஓட்டி வருபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ்பீர் சிங்.இவர், 92 வயது மூதாட்டியை தன் காரில் ஏற்றிச் சென்றார்.வழியில், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த போது, அவர், வங்கிக்குச் சென்று, தன் கணக்கில் இருந்து, 17 லட்சம் ரூபாயை எடுத்து, வருமான வரி பாக்கி செலுத்தப் போவதை அறிந்தார். இதில் ஏதோ மோசடி உள்ளதாக அவர் உள்மனம் கூறியது.
இதை, அந்த மூதாட்டியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. உடனே, ராஜ்பீர் சிங், மூதாட்டியிடம் வரி அலுவலரின் தொலைபேசி எண்ணை வாங்கி, தொடர்பு கொண்டார். அப்போது, ராஜ்பீர் சிங் கேட்ட கேள்விகளுக்கு எதிர்தரப்பில் இருந்து சரியான பதில் வரவில்லை; தொடர்பும் துண்டிக்கப்பட்டது.அப்போதும், அந்த மூதாட்டி ராஜ்பீர் சிங்கின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், வங்கிக்குச் செல்வதிலேயே குறியாக இருந்தார். அதனால், காரை நேராக போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற ராஜ்பீர் சிங், அங்குள்ள அதிகாரிகளிடம் விபரத்தை தெரிவித்தார்.
அவர்களின் விசாரணையில், வருமான வரி அலுவலகத்தில் இருந்து அந்த மூதாட்டிக்கு எந்த அழைப்பும் செல்லவில்லை என்பதும், அவர் பணத்தை அபகரிக்க, மோசடி கும்பல் முயற்சித்ததும் தெரியவந்தது. இதை மூதாட்டியிடம் எடுத்துக் கூறிய போலீசார், ராஜ்பீர் சிங்கின் நேர்மையை பாராட்டி, 3,500 ரூபாய் அன்பளிப்பு வழங்கி, முகநுாலில் இந்த செய்தியை வெளியிட்டனர்.இதையடுத்து, சமூக வலைதளங்களில், ராஜ்பீர் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மோசடியில் இருந்து காப்பாற்றிய ராஜ்பீர் சிங்கிற்கு, மூதாட்டி உணர்வுபூர்வமான நன்றி தெரிவித்தார்.
இக்கட்டான தருணத்திலும், துரிதமாக செயல்பட்ட ராஜ்பீர் சிங்கிற்கு, அமெரிக்க போலீசார் பாராட்டு தெரிவித்து, தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளனர்.