ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னாள் அதிபர் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் 2018-ம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் சில முக்கிய நிபந்தனைகளை ஈரானும் புறக்கணித்தது.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே பிரச்சனை முழுமையாக முடிவுக்கு வரும் என ஈரான் கூறி வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
ஈரானில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் முந்தைய டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட சில பொருளாதாரத் தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது ரத்து செய்துள்ளது.
இது அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதை வரவேற்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா:
பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சி, துருக்கியிலும் பாதிப்பு
பிரான்ஸில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேஸிலும் உள்ளன. பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2.,14,542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,06,02,932 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமரை சீனா அவமதித்ததா?
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்க்கால ஒலிம்பிக் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் முக்கிய குழுவுடன் சீனா சென்றிருந்தார்.
அவரது குழுவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, நிதி அமைச்சர் செளகத் தாரின், திட்டமிடல் துறை அமைச்சர் அசாத் உமர், தகவல் அமைச்சர் ஃபாவத் செளத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசஃப், வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் உள்ளிட்டோர் சென்றனர்.
ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான குழு பல்வேறு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிட்டிருந்தது.
எனினும், முக்கிய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெறும் என்று சீனா அறிவித்தது.
நேரடியாக ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கலாம் என புறப்பட்டு வந்த பாகிஸ்தான் குழுவுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியது.
காணொலி வாயிலாக சந்திப்பு கூட்டம் நடைபெற்ற தகவலை பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கன் எல்லை பிரச்சனை மற்றும் பலூசிஸ்தான் விவகாரம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை கவலையில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சீனாவிடம் இருந்து 3 பில்லியன் டாலர்களும், ரஷியா மற்றும் கஜகஸ்தானிடம் இருந்து 2 பில்லியன் டால்ர்களும் கோர பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை 1993 குண்டு வெடிப்பு வழக்கு:
அமீரகத்தில் குற்றவாளி கைது
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த கோர சம்பவத்தில் 257 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அபு பக்கர் என்பவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் பாகிஸ்தானில் ஆயுதம் மற்றும் வெடிப்பொருள் பயிற்சி பெற்றவர். மேலும் மும்பையில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் வீட்டில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்.
கைதான அபு பக்கர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷியா-சீனா கூட்டறிக்கை: தைவான் கடும் கண்டனம்
சீனாவில் குளிர்க்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் புதின் வருகை தந்திருந்தார்.
தொடக்க விழாவுக்கு நடைபெறுவதற்கு முன்பு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை புதின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் விவகாரம், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ரஷியா, ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாகவும், தைவானின் சுதந்திரத்தை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கு, தைவான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் மோசமான முகத்தை உலக நாடுகள் அனைத்திற்கும் தெளிவாகக் காட்டுகிறது என்று தைவான் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.