இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
இரா. சம்பந்தன் வயது மூப்பு காரணமான, உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர் இரா. சம்பந்தன். இவர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகவும் இருந்தார். மேலும், பல ஆண்டுகள் எம்.பி-யாகவும் இருந்த அவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் அவையில் துணிச்சலான மற்றும் இடைவிடாது குரல் கொடுத்தவர். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, அவர் ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள் தமிழர்களுக்கு சம உரிமைகளை அயராது கோரினார். வழக்கறிஞராக பயிற்சி பெற்ற அவர், இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள ஸ்தாபனம் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான தனது வாதங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி இரங்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன்.
சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இ.பி.எஸ் இரங்கல்
இலங்கையின் மூத்த அரசியல் சம்பந்தன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய, ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன,
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) ஐயா, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.