scorecardresearch

விஜயகலா மகேசுவரன்: புலிகளை ஆதரித்து பேசியதால் அமைச்சர் பதவியை இழக்கிறார்!

விஜயகலா மகேசுவரன் பேசிய வீடியோவில் அவரது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உரையும், அதற்கு கூட்டத்தினர் கொடுக்கும் கைத்தட்டல் வரவேற்பும் தெளிவாக பதிவாகியிருக்கின்றன.

Vijayakala Maheswaran Pro LTTE Speech, To Loose Her Minister Post
Vijayakala Maheswaran Pro LTTE Speech, To Loose Her Minister Post

விஜயகலா மகேசுவரன், இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்! இவரது கணவர் தியாகராசா மகேஸ்வரன் வகுத்துக் கொடுத்த அரசியல் இது!

விஜயகலா மகேசுவரன் … உலகத் தமிழர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை ஆகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, ரனில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் சிறுவர் நல ராஜாங்க மந்திரியாக பதவி வகித்து வருபவர் இவர்! அவரது பதவிதான் இப்போது ஊசலாடுகிறது.

விஜயகலா மகேசுவரன் அப்படி என்ன பேசினார்? யாழ்ப்பாணத்தில் ஜூலை 2-ம் தேதி நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர், ‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுமிகள் கூட இப்போது பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்’ என்றார்.

விஜயகலா மகேசுவரன் இப்படி பேசியது இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. விஜயகலா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது’ என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் சில அலுவல்கள் இருந்ததால் ஜூலை 3-ம் தேதி விஜயகலா நாடாளுமன்றம் செல்லவில்லை. அவர் அவைக்கு செல்லும்போது அவரது ராஜினாமா கோரி அமளி வெடிக்கும் என தெரிகிறது.

விஜயகலா மகேசுவரன் யார்? அவரது பின்னணி என்ன?

விஜயகலா மகேசுவரன், இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்! பெரும்பான்மை சிங்களர்களுக்கு ஆதரவான கட்சியில் இருந்தபோதும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர்! இவரது கணவர் தியாகராசா மகேஸ்வரன் வகுத்துக் கொடுத்த அரசியல் இது!

தியாகராசா மகேஸ்வரன், ஏற்கனவே ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர்தான்! கடந்த 2008-ம் ஆண்டு கொழும்பில் கோவில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார் அவர்!

ராஜபக்‌ஷே அரசு மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்து வந்ததால், ராணுவத்தின் ஒரு பிரிவினரே அவரை திட்டமிட்டு கொன்றதாக சொல்லப்படுகிறது. அவரது மரணத்திற்கு பிறகு விஜயகலா அதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இயங்கி வருகிறார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் பலம் பெற வேண்டும் என ஒரு அமைச்சரே பேசியது சிங்கள இனவாதிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயகலா சார்ந்த கட்சியின் தலைவரும் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கேவும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

விஜயகலாவை பதவி நீக்கம் செய்ய அதிபர் மைத்ரி ஸ்ரீபாலாவிடம் பிரதமர் ரனில் பரிந்துரை செய்துவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. எனவே விஜயகலா பதவிக்கு ஆபத்து உருவாகிவிட்டது.

இதற்கிடையே, ‘விடுதலைப் புலிகள் நிர்வாகத்தைவிட இப்போது மைத்ரிபாலா நிர்வாகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதையே குறிப்பிட்டேன். விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப்பெற வேண்டும் என கூறவில்லை’ என அமைச்சர் ஒருவரிடம் விஜயகலா விளக்கம் அளித்ததாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் விஜயகலா பேசிய வீடியோவில் அவரது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உரையும், அதற்கு கூட்டத்தினர் கொடுக்கும் கைத்தட்டல் வரவேற்பும் தெளிவாக பதிவாகியிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டதாக அரசுகள் சொன்னாலும், இலங்கை அரசியலில் புலிகள் ஏற்படுத்திவிட்ட தாக்கம் மறையக் கூடியதல்ல.

 

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Vijayakala maheswaran pro ltte speech to loose her minister post