Advertisment

விஜயகலா மகேசுவரன், அமைச்சர் பதவியை உதறியது ஏன்? விடுதலைப் புலிகளை ஆதரித்தது குறித்தும் விளக்கம்

விஜயகலா மகேசுவரன், சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘புலிகள் மீண்டும் வலுப்பெற வேண்டும்’ என குறிப்பிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakala Maheswaran Resigned Minister Post, Reasons

Vijayakala Maheswaran Resigned Minister Post, Reasons

விஜயகலா மகேசுவரன் ராஜினாமா ஏன்? என்பது குறித்து காரணத்தை விளக்கி அறிக்கை விடுத்தார். மக்களுக்காகவே பதவி துறந்தேன் என குறிப்பிட்டார் அவர்!

Advertisment

விஜயகலா மகேசுவரன், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் எம்.பி.யாக தேர்வு பெற்றவர்! பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சிறுவர் நல விவகார அமைச்சராக பொறுப்பில் இருந்தார் விஜயகலா.

விஜயகலா மகேசுவரன், சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்தபோது வடக்கு மற்றும் கிழக்கில் இப்படி வன்முறைகள் நடக்கவில்லை. போதை புழக்கம் இல்லை. எனவே புலிகள் மீண்டும் வலுப்பெற வேண்டும்’ என குறிப்பிட்டார்.

இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்ற அமைச்சரே இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜயகலா.

ராஜினாமா குறித்து விஜயகலா மகேசுவரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை வருமாறு: ‘வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமாச் செய்துள்ளேன்.

வடக்கில் குறிப்பாக யாழ் குடா நாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.

மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன். இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார். இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால்தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன்.

தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.

இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன்.

என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால்தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன். இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படும்போது நாம் பேசாதிருக்க முடியாது.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன்.’ இவ்வாறும் விஜயகலா மகேசுவரன் கூறியிருக்கிறார்.

 

Srilanka Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment