அனைத்து வடிவிலான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மியான்மருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச்சூட்டையும் மியான்மர் ராணுவம் நடத்தத் துணிந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மியான்மரில் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து வடிவிலான வன்முறைகளையும் மியான்மர் அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மியான்மரில் நிலவும் நெருக்கடி நிலையை மத்தியஸ்தம் செய்வதற்கு சிறப்பு குழுவை அனுப்பினால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி, பிரிட்டன் அரசு ஒரு வரைவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது. அதில்,வன்முறையால் மியான்மர் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதிக எண்ணிக்கையிலானோர் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்கிறார்கள் என்று கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரைவு, பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடுபவர்களை அந்நாட்டு ராணுவத்தினர் சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைக்கின்றனர். இதுவரை 11,787 பேர் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் 8,792 பேர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் செய்தித்தொடர்பாளர் ரவீணா ஷம்தாசனி அண்மையில் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“