இலங்கையில் நேற்று நடந்த உள்ளாட்சித்தேர்தலில், பெரும்பாலான இடங்களில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக சிங்களவர்களின் பகுதியான காலே, ஹம்பந்தோட்டா ஆகிய மாவட்ட சபைகளை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. மாத்தரா, புத்தளம், மோனேரேகரா மற்றும் சில தெற்கு மாகாண மாவட்டங்களில் இந்த கூட்டணி முன்னிலையில் இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி கிழக்கு மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை, இலங்கை தமிழரசு கட்சி யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளது.
பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தாலும் அதனை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ராஜபக்ஷேவின் கட்சி முன்னிலையில் இருந்தாலும், தமிழர்களின் பகுதிகளில் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷே தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.