இலங்கையில் வசிக்கும் முடி மற்றும் ஒப்பனை கலைஞரான ஷரீன் சில்வா, மிகப்பெரிய பொளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதால் வாழ்க்கையை நடத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்.
இரண்டு குழந்தைக்கு தாயாரான சில்வா கூறுகையில், டீக்கு போடுவதற்கு பிரஷ் பால் அல்லது பால் பவுடர் கூட இல்லை. குழந்தைகளுக்கான பால் பொருள்கள் விலை வழக்கத்திற்கு மாறாக உச்சத்தில் உள்ளது என்றார்.
பணவீக்கம், பலவீனமான அரசாங்க நிதி, தவறான நேரத்தில் வரிக் குறைப்பு, முக்கிய வருவாயான சுற்றுலை துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டது ஆகியவை இலங்கையை மிகப்பெரிய பொருளாதார அழிவை நோக்கி தள்ளியுள்ளது. உதாரணமாக, உணவுப் பொருட்களின் விலை கடந்த மாதத்தில் மட்டும் 25% வரை உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜனவரி 2020 முதல் 70% சரிந்து பிப்ரவரியில் சுமார் $2.3 பில்லியன் (€2.1 பில்லியன்) ஆக உள்ளது. இது ஆண்டின் பிற்பகுதியில் சுமார் $4 பில்லியன் கடனைச் செலுத்துவதை எதிர்கொள்கிறது.
இலங்கையின் தற்போதைய கையிருப்பு, சுமார் ஒரு மாத மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே போதுமானது.
அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால், எரிபொருள், உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், பணம் செலுத்துவதற்கும் நாடு போராடி வருகிறது. இவை, வரலாற்றில் இல்லாத மின்வெட்டுக்கு வழிவகுத்தது. ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே போல், எரிபொருள் நிலையங்கள் வெளியே மிகப்பெரிய வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, செய்தித்தாள் மற்றும் அச்சுத் தொழில்கள் கூட அச்சுப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை, பள்ளி தேர்வுகளை ஒத்திவைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது.
இலங்கையின் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான பிரசாத் வெலிகும்புர கூறுகையில், திடீர் நெருக்கடியில் முக்கியமாக சிக்கிக்கொண்டவர்கள் தினசரி ஊதியம் பெறுபவர்கள் தான். டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை இது.
பொருளாதார நெருக்கடி இலங்கை வாசிகளிடையே கவலையையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
வரி குறைப்பு,பொது நிதி அழுத்தம்
2019 ஆம் ஆண்டு விரைவான பொருளாதார வளர்ச்சியை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, தற்போதைய பொருளாதார அவசரநிலை சவாலாக மாறியுள்ளது.
ராஜபக்சே தனது பிரச்சாரத்தின்போது, 15% மதிப்பு கூட்டப்பட்ட வரியை பாதியாக குறைப்பதாகவும், நுகர்வு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழியாக வேறு சில வரிகளையும் ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார்.
இந்த வரிக் குறைப்பு, அரசாங்கத்திற்கான வருவாயில் பில்லியன் கணக்கான ரூபாய் இழப்புக்கு வழிவகுத்தது. ஏற்கனவே கடனில் உள்ள பொருளாதாரத்தின் பொது மேலும் அழுத்தத்தை வழங்கியது.
அச்சமயத்தில் வந்த கொரோனா பெருந்தொற்றால், இலங்கையின் முக்கிய வருவாய் ஆதரமான சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டது. அந்த துறை, நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 12% க்கும் அதிகமாக உள்ளது.
இலங்கையின் பொதுக் கடன், 2019 இல் 94% ஆக இருந்த நிலையில், 2021 இல் 119% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி குழுவின் பொருளாதார நிபுணர் சாயு தம்சிங்க கூறுகையில், "வரிகள் குறைப்பு, மத்திய வங்கியின் நிதியுதவி மூலம் அதிக பணம் சேர்த்தது ஆகியவை தவிர்க்க முடியாத நெருக்கடியை மேலும் மோசமாக்கியது என்றார்.
இந்தியா, சீனா, ஐஎம்எஃப் உதவி?
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ராஜபக்சேவின் அரசாங்கம் "அத்தியாவசியமற்றது" என்று அறிவிக்கப்பட்ட பல பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியா, சீனாவையும் உதவிக்காக அணுகியுள்ளது.
இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து மேலும் 1 பில்லியன் டாலர் கூடுதல் கடன் இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடன் வரிகளுக்கு மேலதிகமாக, இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுகளுக்காக $400 மில்லியன் நாணய பரிமாற்றம் , $500 மில்லியன் கடந் லைன் என ஆதரவை நீட்டியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், 2.5 பில்லியன் டாலர் கடன் உதவிக்காக சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருதரப்பு ஒப்பந்தங்கள் இருந்தாலும், இலங்கை தனது கடனை மறுசீரமைக்கவோ அல்லது நிவாரணப் பேக்கஜ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ சர்வதேச நாணய நிதியத்தை (IMF) அணுக வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முதலில் சர்வதேச நாணய நிதியகத்தை அணுக மறுத்த ராஜபக்சேவின் அரசாங்கம், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிக்காக உலகளாவிய நிதி நிலைமையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்காக, ராஜபக்சே அடுத்த மாதம் வாஷிங்டன், டி.சி.க்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.