scorecardresearch

சிரியாவில் ஏன் இந்த கலவரம்? பிஞ்சுகள் ஏன் கருக வேண்டும்?

நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் நரகமாக்கப்பட்டது

சிரியாவில் ஏன் இந்த கலவரம்? பிஞ்சுகள் ஏன் கருக வேண்டும்?

மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்த வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டனர். ஆனால், லிபியாவில் சர்வாதிகாரியான கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கொல்லப்பட்டார். அதன் பின் மற்ற நாடுகளில் அரபு எழுச்சி பரவியது. அதில் ஒன்று தான் சிரியா.

அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. இதனால் அரசு, மக்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு மற்றொரு காரணம், மதப் பிரிவினை. சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும், அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன.

ஆனால், பெரும்பான்மை கொண்டிருக்கும் சன்னி பிரிவு மக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் தான். வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்ற பிரிவினருக்கு முக்கியத்தும் இல்லை என்கிற குற்றாச்சாட்டு பலமாக எழுந்தது.

இதையடுத்து, சன்னி பிரிவினருக்கு எதிராக தொடங்கிய புரட்சி, ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.
லிபியாவில் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்த்த சீனாவும், ரஷ்யாவும் தங்களது வர்த்தக கூட்டாளியான பஷார் அல் ஆசாத்தை ஆதரித்தனர். இந்த நேரத்தில் ஈராக்கில் இருந்த வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், ஆசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பெரும் படைகளே சிரியாவுக்குள் நுழைந்தன.

நான்குமுனை தாக்குதலாக நடக்கும் யுத்தத்தில் அரசு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை களம் இறங்கின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி போரிட்டு வருகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்ட ஐ.எஸ். அமைப்பு போரிடுகிறது.

2011ம் ஆண்டு தொடங்கிய சிரியா யுத்தம், 2016ம் ஆண்டில் உக்கிரம் அடைந்தது. அலெப்போ நகரம் 2016ல் மிகப்பெரிய போர்க்களமாக மாறியது. 2012ம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரை கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். 2016ல் இந்த நகரின் மக்கள் தொகை வெறும் மூன்று லட்சமாக குறைந்தது. நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் நரகமாக்கப்பட்டது.

ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை விட்டு விரட்டப்பட்டனர். இரு முக்கிய பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இந்தப் போர் யாரையும் விட்டு வைக்கவில்லை.

இதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் கொண்டுச் செல்ல முடியும். ஆனாலும், சிரிய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது தெரியவில்லை. லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டு வருவது தான் உச்சக்கட்ட கொடுமை.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: What is happening in syria