உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் நடத்த தொடங்கியது. தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இதுவரை 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் போரை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கோரினார்.
இந்தப் போருக்கான காரணம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. உக்ரைன். அந்நாட்டில் பெரும்பாலானோர் ரஷிய மொழி பேசுபவர்கள்தான்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை 2014-ஆம் ஆண்டு ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது.
அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனில் முக்கியப் பகுதிகளை கைவசமாக வைத்துள்ள உக்ரைன் பிரிவினைவாதிகளையும் ரஷியா ஆதரித்து வந்தது.
அவர்களின் மூலம் உக்ரைனை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டு வந்தது ரஷியா.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை.. அதிகரிக்கும் கொரோனா.. மேலும் செய்திகள்
அதேநேரம், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் தன்னை இணைத்துக் கொண்டு பாதுகாப்பு தேட நினைத்தது. நேட்டோ அமைப்பில் இணைந்தால் தனக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷியா கருதியது.
இதனால், நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக் கொள்ள கூடாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியா அறிவுறுத்தியது.
ஆனால், ரஷியாவின் கோரிக்கையை அந்த நாடுகள் ஏற்க மறுத்தன.
இந்த சூழ்நிலையில் தான் உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க ரஷியா முன்வந்தது. இதற்காக பெலாரஸ்-உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிலை நிறுத்தி இருந்தது.
உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கக் கூடும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி விட்டதாகவும் ரஷியா கூறியிருந்தது.
அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரான்ஸ் முயற்சி செய்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முதல் கட்ட பொருளாதாரத் தடைகளை ரஷியாவுக்கு எதிராக பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தெற்கு பெலாரஸ் அருகே உக்ரைன் எல்லையில் ராணுவ வாகனங்கள் நூற்றுக்கணக்கானவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படம் மூலம்த தெரியவந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
போர் தொடுப்பதை உறுதிப் படுத்தும் வகையில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனின் லுகான்ஸ்க், டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனி நாடாக ரஷியா அங்கீகரித்தது.
மேலும், ரஷியாவுக்கு வெளியே ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள அந்நாட்டு நாடாளுமன்றமும் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து போர் தொடுக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று முதல் வான்வழியாகவும், ஏவுகணைகள் மூலமாகவும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய வீரர்கள் தரை வழி தாக்குதலையும் தொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தத் தாக்குதல் உக்ரைன் மக்களை பாதுகாப்பதற்குதான் என்று கூறிய ரஷிய அதிபர் புதின், பிற நாடுகள் இதில் தலையிட வேண்டாம் என்றும் மீறி தலையிட்டால் அந்நாடுகள் இதுவரை எதிர்கொள்ளாத மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இது காட்டுமிரண்டித்தனமாக தாக்குதல் என்று அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.