/indian-express-tamil/media/media_files/2025/09/25/nasa-astronaut-anna-menon-2025-09-25-08-33-25.jpg)
ஸ்பேஸ் X பொறியாளர் முதல் நாசா விண்வெளி வீராங்கனை வரை... யார் இந்த அன்னா மேனன்? அவரது இந்தியத் தொடர்பு என்ன?
அமெரிக்க விண்வெளி வரலாற்றில் இதுவரை விண்வெளியை ஆராயத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 400 பேருடன், மேலும் 10 புதிய விண்வெளி வீரர் வேட்பாளர்களை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய குழுவில், உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் அன்னா மேனன் இடம்பிடித்துள்ளார்.
யார் இந்த புதிய விண்வெளி நட்சத்திரங்கள்?
நாசா அறிவித்த 10 புதிய வேட்பாளர்கள்: பென் பெய்லி, லாரன் எட்கர், ஆடம் ஃபர்மான், கேமரூன் ஜோன்ஸ், யூரி கூபோ, ரெபேக்கா லாவ்லர், அன்னா மேனன், டாக்டர் இமெல்டா முல்லர், எரின் ஓவர்காஷ், மற்றும் கேத்தரின் ஸ்பைஸ் ஆவர். இந்தக் குழுவில் மொத்தம் 6 பெண்கள் உள்ளனர். இது நாசா வரலாற்றில் விண்வெளி வீரர்கள் தேர்வில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதல் முறை.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நாசாவின் செயல் நிர்வாகி சீன் டஃபி, "இந்த 10 பேரில் ஒருவர் உண்மையில் செவ்வாய்க் கிரகத்தில் காலடி வைக்கும் முதல் அமெரிக்கர்களில் ஒருவராக இருக்கக்கூடும்" என்று கூறி இந்தக் குழுவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ், ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் முதல் பெண் நிலவுக்கு அனுப்பப்படவிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தத் தேர்வைப் பாராட்டினார்.
அன்னா மேனன்: விண்வெளியில் சாதனைப் பயணம்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில், அன்னா மேனன் ஏற்கெனவே தாழ் புவிச் சுற்றுப்பாதைக்குப் பயணம் செய்தவர். கடந்த ஆண்டு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் (Polaris Dawn) தனியார் விண்வெளிப் பயணத்தில் இவர் மிஷன் நிபுணராகவும், மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றினார். அந்தப் பயணத்தில், தனது சகப் பயணி சாரா கில்லிஸுடன் இணைந்து, எந்தவொரு பெண் விண்வெளி வீரரும் சென்றிராத அதிகபட்ச உயரத்தை அடைந்து உலக சாதனையைப் படைத்தார். அன்னா மேனன், 2021-ல் நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரரும், அவரது கணவருமான அனில் மேனனின் வழியைப் பின்பற்றியுள்ளார்.
அன்னா மேனனின் பின்னணி
அன்னா மேனன் 2025 செப்டம்பரில் நாசாவின் விண்வெளி வீரர் வேட்பாளர் வகுப்பில் தனது பணியைத் தொடங்கவுள்ளார். ஹூஸ்டனில் பிறந்த இவர், டெக்சாஸ் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் ஸ்பானிய மொழியிலும், டியூக் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கிலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் முன்பு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தின் மிஷன் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றினார்.
நாசாவுக்கு வருவதற்கு முன், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் மூத்த பொறியாளராகப் பணிபுரிந்துள்ளார். அங்கு டிராகன் மற்றும் ஸ்டார்ஷிப் விண்கலங்களுக்கான குழு நடவடிக்கைகளை வடிவமைத்து, பல மிஷன்களுக்கு மிஷன் இயக்குநராகவும் பணியாற்றினார். அன்னா மேனன் விண்வெளிப் பயணப் பயிற்சிகள் மட்டுமின்றி, அமெரிக்க விமானப்படை அகாடமியில் பாராசூட் இறக்கைகள் (Parachute wings) பெறுவது, மவுண்ட் கோட்டோபாக்ஸியில் ஏறுவது, ஸ்கூபா டைவிங் போன்ற சாகசப் பயிற்சிகளையும் முடித்துள்ளார். இவரின் கணவர், அனில் மேனன் (45), உக்ரைனிய மற்றும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.