இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நேற்று (ஆகஸ்ட் 12) மாலை நியூயார்க்கின் சௌதாகுவா நிறுவனத்தில் நடைபெற்ற புத்தக விழாவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென மேடைக்கு வந்த இளைஞர் ருஷ்டியின் கழுத்து, வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ருஷ்டியை தாக்கிய 24 வயதான இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி (75). 1988ஆம் ஆண்டு ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (The Satanic Verses)என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நாடுகள் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் புத்தகத்திற்கு தடை விதித்தனர். இறைதூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் புத்தகம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த புத்தகத்திற்கு தடை உள்ளது.
ருஷ்டிக்கு எதிராக வெளிப்படையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஈரான் நாட்டு முன்னாள் அதிபர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "அந்த நபர் எங்கிருந்து வந்தார் என தெரியவில்லை. மேடையில் இருந்த ருஷ்டியை மார்பு, கழுத்து பகுதியில் சரமாரியாக தாக்கினார்" என்று கூறினர்.
சல்மான் ருஷ்டியை தாக்கி இளைஞர் யார்?
ருஷ்டியை தாக்கிய சில நிமிடங்களிலேலே போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். அவர் ஹாடி மாதர் (24) நியூ ஜெர்சியை சேர்ந்தவர் என அடையாளம் கண்டனர். சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மாதரின் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்ததில், அவர் ஷியா தீவிரவாதம், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பின்பற்றியுள்ளார் எனத் தெரிய வந்தது.
மாதருக்கும் ஐஆர்ஜிசிக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றாலும், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காசிம் சுலேமானி மற்றும் ஈரானிய தீவிரவாதிகளின் படங்களை அவரது செல்போனில் கண்டுள்ளனர். காசிம் சுலேமானி மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2020 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை அந்த அமைப்பில் பணியாற்றினார் என்று தகவல் கூறுகிறது.
ருஷ்டியின் தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து மாதரிடம் விவாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு பாஸ் வழங்கப்பட்டது
புத்தக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஸ் வழங்கப்பட்டது. மாதரிடத்திலும் அந்த பாஸ் இருந்தது என சௌதாகுவா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஈ ஹில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய நேரப்படி நேற்று இரவு 8.17 மணிக்கு ருஷ்டி நிகழ்ச்சி மேடைக்கு வந்தார். சிறிது நேரத்திற்குப் பின் மாதர் மேடையில் குதித்து ருஷ்டியைத் தாக்கினார் என்று கூறினார்.
ஸ்டானிஸ்ஸெவ்ஸ்கி கூறுகையில், "நிகழ்ச்சியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாதரை மேடைக்கு கீழே இழுத்து தடுத்தோம். பின் போலீஸார் அவரைப் பிடித்தனர்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.