டெல்டா மாறுபாட்டின் தற்போதைய பரவல், ஒமிக்ரான் தோற்றம், அதிவேக பரவல் ஆகியவை சுகாதார கட்டமைப்பை தகர்க்கும் கொரோனா சுனாமியாக மாறக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் தரவுத்தளத்தின்படி, உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதிய உச்சமாக 9 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முந்தைய அதிகபட்சமாக, ஏப்ரல் மாதத்தில் 8 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “டெல்டா, ஒமிக்ரான் கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன. ஒமிக்ரான் டெல்டாவை போலவே அதிவேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துகிறது” என்றார்.
இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் ரோசெல் பி. வாலென்ஸ்கி பேசுகையில், “கடந்த வாரத்தில் சுமார் 60% பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் சுமார் 240,000 பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் குறைவாகவே உள்ளன.
ஏழு நாள் சராசரியாக ஒரு நாளைக்கு 9,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இது கடந்த வாரத்தை விட 14% அதிகரித்துள்ளது. அதே சமயம், தினசரி இறப்புகளின் ஏழு நாள் சராசரியில் ஒரு நாளைக்கு சுமார் 1,100 ஆக இருந்தது. இது 7% குறைந்துள்ளது.
தொற்று பாதிப்புக்குளாகி தீவிரமடைந்து காலதாமதமாக மருத்துவமனைக்கு வருவது உயிரிழப்புக்கு காரணமாகிறது. தென் ஆப்பிரிக்கா,இங்கிலாந்து தரவுகளின்படி முழுமையாக தடுப்பூசியும், பூஸ்டரும் செலுத்திக்கொண்ட நபர்களிடம் ஒமிக்ரான் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர். சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், “ஆரம்பகால நிஜ உலகத் தகவல்களின் படி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் இடையிலான தொடர்பு தடுக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் தரவுகள் தற்போது தான் வர தொடங்கியுள்ளன. இந்த வைரஸ் என்ன செய்யும் என்று எங்களால் இன்னும் கணிக்க முடியவில்லை. தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், வைரஸை நடுநிலையாக்கும் தடுப்பூசிகளின் திறன் குறைகிறது. கடுமையான நோய் மற்றும் இறப்பிற்கு எதிராக தடுப்பூசி பாதுகாப்பானதாக தற்போதும் இருந்தாலும், கேள்விகளை எழுப்புகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ பாதிப்பு உட்பட சரியான தரவு இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக் ரியான், “ஒமிக்ரான் தொற்று அதிகப்படியான மக்கள் தொகை உள்ள இடங்களிலும், தடுப்பூசி போடாதவர்களிமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் ஒமிக்ரான் தாக்கம் இருந்தாலும், இளைஞர்களிடம் தான் அதிகளவில் முதன்முதலில் தென்பட்டது.
தற்போது, வயதானோர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வரும் நாள்களில், பாதிப்பு எண்ணிக்கையும், நோய் தீவிரத்தன்மையும் இரட்டிப்பாகுவதை பார்க்க நேரிடலாம். அதிவேக தொற்று பரவல், நோயாளிகளின் எண்ணிக்கையும், சுகாதார துறை மீதான அழுத்ததையும் அதிகரிக்கக்கூடும் .
அதேசமயம், ஏராளமான தடுப்பூசிகள் உள்ள நாடுகளில் கூட தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே, இது ஒமிக்ரான் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்பதை உறுதிசெய்கிறது” என்றார்.
மேலும், பேசிய டெட்ரோஸ், தற்போதைய பாதிப்பு லேசாக இருந்தாலும், ஆபத்தானதாகவும் மாறக்கூடும். அதன் அதிக பரவல் விகிதங்கள், மருத்துவமனை சேர்த்தல் மற்றும் இறப்புகளை அதிகரிக்கலாம். நல்ல செய்திகள் நிறைய வருவதால், கெட்ட செய்திகளை குறைத்து மதிப்பீடக் கூடாது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil