குவைத்தில் மிட்ரிபா பகுதியில், பூமியின் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையும், பாகிஸ்தானின் தர்பாத் பகுதியில், பூமியின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் (World Meteorological Organization (WMO) தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடான குவைத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 21ம் தேதியும், பாகிஸ்தானில் 2017ம் ஆண்டு மே 28ம் தேதியும் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வெப்பநிலை பதிவுகளில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்த சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம், குவைத்தில், பூமியின் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையாக 53.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தர்பாத் பகுதியில், 53.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, அங்கு பூமியின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குவைத்தின் மிட்ரிபா பகுதியில் நிலவிய வெப்பநிலையே, ஆசிய கண்டத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலை என்றும், கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக வெப்பநிலை இது என்று WMO தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பர்னாஸ் கிரீக் பகுதியில் 1913ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி 56.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே, பூமியின் அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது. துனிஷியாவின் கெபிலி பகுதியில், 1931ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 55 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்த வெப்பநிலையே, பூமியின் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.
குவைத் மற்றும் பாகிஸ்தானில் நிலவிய வெப்பநிலை குறித்த மாறுபாட்டை கண்டறிய இத்தாலி, குவைத், பாகிஸ்தான். சவுதி அரேபியா, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, எகிப்து, துருக்கி, ஆர்மேனியா, ஈரான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் குழுவாக செயல்பட்டு தீர்வு கண்டுள்ளனர்.