பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜனவரியில் பதிவான பாதிப்புகளை காட்டிலும், இது 10 ஆயிரம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பிரிட்டனில் மட்டும் சுமார் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காபூலுக்கு தாலிபான்களை அழைத்து வந்தேன் - முன்னாள் ஆப்கான் அதிபர்
தாலிபான்களை ஆப்கான் தலைநகரை கைப்பற்றவில்லை. அவர்கள் வரவழைக்கப்பட்டதாக முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காபூலுக்கு தாலிபான்களை நான்தான் அழைத்து வந்தேன். அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க காபூலுக்கு வெளியே காத்திருக்க குழு ஒப்புக்கொண்டது.
இதன் மூலம் நாட்டில் குழப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கும், அந்நிய சக்திகள் கொள்ளையடிப்பதைதடுக்கவும், நாட்டின் மக்கள்தொகையைப் பாதுகாக்கவும் இச்செயலில் ஈடுபட்டேன்.
ஆனால், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் பிற அரசு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியது அமைதியான மாற்ற ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருந்தது என்றார்.
கரோலின் கென்னடி, மிச்செல் குவானை தூதர்களாக தேர்வு செய்த பைடன்
ஒபாமா ஆட்சியின் போது ஜப்பானில் தூதராக பணியாற்றிய அதிபர் ஜான் எஃப். கென்னடியின் மகள் கரோலின் கென்னடியை ஆஸ்திரேலியாவுக்கான தூதராகவும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒலிம்பிக் ஸ்கேட்டர் மிச்செல் குவானை பெலிஸிற்கான தலைமை தூதராக நியமிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
மேலும், ஆஸ்திரியாவின் தூதராக கென்னடி குடும்பத்தின் மற்றொரு நபரான விக்டோரியா கென்னடியை பைடன் நியமித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் - முன்னாள் சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் திடீர் சந்திப்பு
ரஷ்யாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், உக்ரைன் மற்றும் நான்கு முன்னாள் சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, அரசியல், வர்த்தகம், ஆற்றல் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்த உறுதியளித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு கூட்டாண்மையில் ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, மால்டோவா மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.
பெலாரஸ் ஜனாதிபதி, அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கடந்த ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மோசடி செய்ததாகக் ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டியது காரணமாக, அவர் அந்த கூட்டாண்மையில் இணைவதை புறக்கணித்தார்.
புதிய மென்பொருள் கருவியை உருவாக்கிய அமெரிக்கா
அமெரிக்க ராணுவத் தளபதிகள், ராணுவ விற்பனை, ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தைவான் போன்ற ஹாட்ஸ்பாட்களுக்கு காங்கிரஸின் வருகைகள் போன்ற அமெரிக்க நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை கணிக்க ஒரு மென்பொருள் கருவியை உருவாக்கியுள்ளது.
ஹவாயில் உள்ள அமெரிக்க இந்தோ-பசிபிக் மையத்திற்கு பாதுகாப்பு துணை செயலாளர் கேத்லீன் ஹிக்ஸ் சென்ற போது, இந்த கருவி குறித்து விளக்கப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தரவுகளைப் பார்த்து, செயல்பாடுகளை மதிப்பீடு செய்கிறது.
இந்த கணினி அடிப்படையிலான அமைப்பு அமெரிக்காவின் சில செயல்கள் சீனாவின் எதிர்வினையைத் தூண்டுமா என்பதை கணிக்க பென்டகனுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.