அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த `டெஸ்ட் டு ட்ரீட்’ என்ற பெயரில் புதிய முயற்சியை ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனையை எளிமையாக செய்துகொள்ள தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
ஒருவேளை அந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கான ஆன்டி-வைரல் மாத்திரைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. இதன் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர்: 1 லட்சம் ஐ.டி வேலைகள்
இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக 1 லட்சம் ஐ.டி. வேலைகள் இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்துவரும் நிலையில், உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளன.
அதன் ஒருபகுதியாக உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படவேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக ஐ.டி துறை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் டிஜிட்டல் துறையில் சுமார் 30 ஆயிரம் மற்றும் பன்னாட்டு வர்த்தக சேவை துறையில் 20 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பெலாரஸ் மற்றும் ரஷியாவில் டிஜிட்டல் மற்றும் வர்த்தக துறைகளில் சுமார் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர்
அகதிகளாக வெளியேற்றம்: ஐ.நா கவலை
உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பத்து லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் 40 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணித்துள்ளது, ஆனால் அந்த கணிப்பு அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி டுவிட்டரில், "ஏழு நாட்களில் உக்ரைனில் இருந்து பத்து லட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்" என கூறியுள்ளார்.
உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹங்கேரியில் 1.16 லட்சம் பேரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாகியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் வெளியேற்றமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2011 இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது 56 லட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு உதவ உலக வங்கி முடிவு
உக்ரைனுக்கு உதவ பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் உதவுவதற்கு முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்ய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு உதவ பன்னாட்டு நிதியம், உலக வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா, உலக வங்கி குழும தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஷ்யா-உக்ரைன் போரால் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கம் மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது. இது, ஏழைகளை கடுமையாக பாதிக்கும். இந்த போர் நீடித்தால், நிதி சந்தைகளில் பாதிப்பு தொடரும்.
உக்ரைன் கோரிக்கையை ஏற்று அவசர நிதி அளிக்க பன்னாட்டு நிதியம் பரிசீலித்து வருகிறது. அதுபோல், உலக வங்கி குழுமம், 300 கோடி டாலர் நிதிதொகுப்பை தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது:
உக்ரைன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறியது.
அந்த நகரின் மையப்பகுதிக்குள் ரஷ்ய படைகள் நகர்ந்தாலும் குறிப்பிட்ட அளவே பலன் அடைந்துள்ளன. இந்த நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகமும் கூறியது.
பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
ஆனால் இந்தத் தகவலை கெர்சன் மேயர் மறுத்தார். தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.